ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகோப்பை டி20 போட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. டி20 போட்டியில் பலமிகுந்த அணியாக வலம் வரும் இங்கிலாந்து அணியும், அயர்லாந்து அணியும் மெல்போர்ன் நகரில் இன்று மோதியது.


158 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தோல்வியால் அயர்லாந்து வீரர்கள் குஷி அடைந்துள்ளனர். மேலும், இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும் சோகம் அடைந்துள்ளனர்.  




டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். இதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். அவர் 8 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர்,ஜோடி சேர்ந்த கேப்டன் பால்பிரைன் – டக்கர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 21 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 103 ரன்களில்தான் பிரிந்தது.


அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த 27 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து அயர்லாந்து விக்கெட்டுகள் விழுந்தது. ஹாரி டெக்டர் டக் அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த டாக்ரெலும் டக் அவுட்டாகினார். சிறப்பாக ஆடிய கேப்டன் பால்பிரைன் 42 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அயர்லாந்து அணி ஆட்டத்தை பார்த்தபோது அவர்கள் 200 ரன்கள் எட்டுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.




158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அயர்லாந்து அணி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. தொடக்க வீரரும், கேப்டனுமாகிய பட்லர் முதல் ஓவரிலே டக் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் ஹேல்ஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்சும் 6 ரன்களில் அவுட்டாக, ஹாரி ப்ரூக் 18 ரன்களிலும், நிதானமாக ஆடிய டேவிட் மலான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தபோது மொயின் அலி – லிவிங்ஸ்டன் கூட்டணி ஜோடி சேர்ந்தது. மொயின் அலி 12 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்களுடனும், லிவிங்ஸ்டன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 14.3 ஓவர்களில் இங்கிலாந்து 105 ரன்களுடன் இருந்தபோது மழை பெய்தது.




மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நடுவர்கள் முடிவை அறிவித்தனர். இதன்படி, அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியால் அயர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியாவை விட ஒரு இடம் உயர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது. களத்தில் மொயின் அலி - லிவிங்ஸ்டன் இருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மேலும், சாம் கரணும் பேட்டிங் செய்ய தயாராக இருந்தார். ஆனால், மழையால் போட்டி முடிவு மாறியதால் இங்கிலாந்து ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.