பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அங்கு நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஓர் அங்கமாக கருதப்படுகிறது.
இச்சூழலில், முதல் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பற்றி பெருமையாக பேசியிருந்தார்.
அஸ்வின் என்னுடைய பயிற்சியாளர்:
உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள அஸ்வினை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருவதாக கூறியிருந்தார்.
மேலும் தம்மை அறியாமலேயே அஸ்வினை பார்த்து நிறையவற்றை கற்று வருவதால் அவர் தம்முடைய பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கிறார் என்றும் சொன்னார். அதேபோல், விரைவில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை உடைக்க போகும் தங்களில் யார் கேரியரின் முடிவில் அதிக விக்கெட்கள் எடுப்பார்கள் என்பதை பார்க்க உள்ளதாகவும் லயன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்கள் ஓய்வுக்கு பின் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக் கொண்டே எதிரெதிர் அணிகளில் விளையாடிய காலங்களை பற்றி மகிழ்ச்சியுடன் பேச விரும்புவதாகவும் கூறினார் நாதன் லயன்.
அவருடைய அந்த பேட்டியை ஆங்கில பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுருந்தது. இது தொடர்பாக லயன் வெளியிடப்பட்ட பதிவில், “ஓய்வுக்கு பின் ஒன்றாக அமர்ந்து பேசக்கூடிய இடத்தை தேர்வு செய்வதில் எங்களுக்கிடையே வலுவான போட்டி இருக்கும்” என்று அஸ்வினை டேக் செய்து பதிவிட்டிருந்தார் லயன்.
மீட்டிங் வைத்துக்கொள்ளலாம்:
இச்சூழலில், அந்த பதிவை பார்த்த அஸ்வின் அவரின் அழைப்பை ஏற்று உங்கள் ஊரிலும் எங்கள் ஊரிலும் மீட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று லயனுக்கு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாம் சொந்த ஊரிலும் வெளியூரிலும் பார்த்துக் கொள்வோம். சிட்னி உங்களுடைய தேர்வு. சென்னையில் மேற்கு மாம்பலம் என்னுடைய தேர்வு. முத்துவுடன் சூப் சாப்பிடலாம். போட்டியில் சிறப்பாக விளையாடுங்கள். விரைவில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.