ஆசிய அளவில் டெஸ்டில் 420 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இந்தியா - வங்கதேச டெஸ்ட்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த வகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.
கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்:
இதனைத்தொடர்ந்து கான்பூரில் இன்று (செப்டம்பர் 27) இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாகீர் ஹாசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் களம் இறங்கினார்கள். ஜாகீர் ஹாசன் ரன் ஏதும் இன்றி வெளியேற அடுத்து வந்த வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 31 பந்தில் அஸ்வின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அந்த வகையில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டினார்.
அதாவது ஆசிய அளவில் டெஸ்டில் 420 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஆசிய அளவில் 419 விக்கெட்டுகளை எடுத்து இந்திய வீரர் அனில் கும்ப்ளே முதல் இடத்தில் இருந்தார். இந்த நிலையில் தான் அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.
ஆசிய அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங் இந்திய வீரராக மூன்றாவது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் இந்த பட்டியலில் முதல் இடத்தில் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, அவர் 101 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 191 இன்னிங்ஸ்களில் விளையாடி 522 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ப்ளேயிங் லெவன்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
வங்கதேச ப்ளேயிங் லெவன்:
ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது.