இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்று வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் கட்டாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் அஸ்வின், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றார். அணிக்கு ஒரு பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல், சிறந்த பேட்ஸ்மேனாகவும் விளங்கி வருகின்றார். நெருக்கடியான நிலையில் இந்திய அணி அஸ்வினை களமிறக்கி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாத வண்ணம் விளையாட வைக்கும் அளவிற்கு பேட்டிங்கிலும் கைதேர்ந்தவர் அஸ்வின் என்றே கூறவேண்டும்.
இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதுவரை முடிந்துள்ள இரண்டு போட்டிகளுடன் சேர்த்து அஸ்வின் 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அடுத்து வரும் மூன்று போட்டிகளில் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
அஸ்வின் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 499 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். நாளை நடக்கவுள்ள அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அடைவார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 9வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் அடைவார். இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளார். இதுவரை அஸ்வின் 95 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் மொத்தம் நான்கு ஆயிரத்து 284.3 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். அதாவது 25 ஆயிரத்து 707 பந்துகள் வீசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சிறந்து பந்து வீச்சு என்றால் அது 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியதுதான். அதேபோல் அஸ்வின், இதுவரை 34 முறை 5 விக்கெட்டுகளும் 24 முறை 4 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். 500 மற்றும் அதற்கு மேல் டெஸ்ட்டில் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. இவர் 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகள் கைப்பற்றி, சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற வரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அஸ்வின் பேட்டிங்கில் தனி முத்திரை பதித்துள்ளார் என்றே கூறவேண்டும். 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 138 இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 124. 375 பவுண்டரிகளும் 21 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் ஆறு ஆயிரத்து 37 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இவரது ஆவ்ரேஜ் ஸ்கோர் 26.59ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 54.18ஆகவும் உள்ளது.