இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது. அதாவது, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் ஹாட்ரிக் தோல்வியை அடையும். அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் போய்விடும். இச்சூழலில் தான் இந்த தொடர் தோல்விகள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை மிகவும் காயமடைய வைத்திருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கும்:
இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், "ரோஹித் ஷர்மா பெருமை மிக்க நபராக இருக்கிறார். அவர் எப்போதுமே எந்த விஷயத்தையும் சாதாரணமாக எண்ணி விட மாட்டார். அவர் களத்தில் சாதாரணமாக நிற்பது போல் தெரியும். ஆனால் இந்த தோல்வி அவருடைய மனதில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கும். அவருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் காயத்தில் இருப்பார்கள்.
இதனால் மீண்டும் அவர் பலமாக ரன் குவிப்பார் என்று நம்புகிறேன்" என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரோஹித் ஷர்மா கடந்த நான்கு இன்னிங்ஸில் மொத்தமாகவே 62 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். வங்கதேச தொடரில் கூட ரோஹித் ஷர்மா நான்கு இன்னிங்சில் 42 ரன்கள் அடித்திருந்தார். இதனால் ரோஹித் ஷர்மா மீதான விமர்சனம் அதிகரித்துக் கொண்டு போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் சொதப்பலான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டயத்தில் இருக்கின்றனர். அப்படி சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் தோல்வி என்ற மோசமான சாதனையை செய்யாமல் இருந்தால் மட்டும் தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு செல்லும் உத்வேகத்தை பெற முடியும் அதோடு பார்டர் - கவாஸ்கர் தொடரிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.