கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்த கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அனுபவம் குறைந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ரோகித், விராட் கோலி கொண்ட அனுபவம் உள்ள இந்திய அணி இழந்தது முதல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரையே நியூசிலாந்துக்கு எதிராக இழந்ததில்லை என்ற பெருமையை விட்டுக்கொடுத்தது என தோல்வி மேல் தோல்வியை இந்திய அணி சந்தித்து வருகிறது.
மோசமான நிலையில் இந்தியா:
இதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு 8 போட்டிகளில் 3 டெஸ்ட் போட்டிகள் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை மாறி 6 போட்டிகளில் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்து.
மேலும், இந்திய அணிக்கு தற்போது மற்றுமொரு சவால் முன் நிற்கிறது. இந்திய கிரிக்கெட் அணி 2001ம் ஆண்டு முதல் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, கங்குலி, டிராவிட், கும்ப்ளே. தோனி, கோலி. ரோகித் என நல்ல தலைமையின் கீழ் இந்திய அணி வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டில் முதன்முறை?
ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிய விதம் இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணியிடம் முதன்முறையாக தொடரை இழந்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக ( ஒயிட்வாஷ்) இழந்தது கடைசியாக 2000ம் ஆண்டு ஆகும்.
அதன்பின்பு, 21ம் நூற்றாண்டு தொடங்கிய 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் முழுமையாக இழந்ததே இல்லை. ஆனால், தற்போது அந்த மோசமான சாதனையை படைக்கும் நிலை உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் வான்கடே மைதானத்தில் வரும் 1ம் தேதி தொடங்குகிறது.
24 ஆண்டுகளுக்கு பிறகு:
இந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி தோற்றால் 24 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த மோசமான நிலையை எதிர்கொள்ளும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதிலும் சிக்கல் ஏற்படும். சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி கடைசியாக 2000ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடே டெஸ்ட் போட்டியையும் இந்திய அணி இழந்தால் விமர்சனங்களை எதிர்கொள்வதுடன் ஆஸ்திரேலிய தொடரில் கட்டாயம் 4 டெஸ்ட் போட்டிகளில் வென்றாக வேண்டிய சூழலுக்கு ஆளாகும்.