மத்திய பிரதேச அணியை வீழ்த்தி விதர்பா அணி ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடந்த மார்ச் 3ம் தேதி முதல் அரையிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் களமிறங்கியது. 


இதில், முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி கேப்டன் அக்‌ஷய் வட்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரராக அதர்வா டைட் மற்றும் துருவ் களமிறங்கினர். ஆனால் இருவரும் எதிர்பார்த்தப்படி சிறப்பாக செயல்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர் அதர்வா 39 ரன்கள் எடுக்க, கருண் நாயர் 105 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் அக்‌ஷய் 1 ரன்னில் வெளியேற, மிடில் ஆர்டரில்  களமிறங்கிய 3 வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனால் விதர்பா அணி 56.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. 


மத்திய பிரதேச அணிக்காக அவேஷ் கான் அபாரமாக பந்துவீசி அசத்தி இருந்தார். இவர் 15 ஓவர்கள் வீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மேலும், குல்வந்த் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். 


அதன்பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய மத்திய பிரதேச அணி 252 ரன்கள் எடுத்தது. மத்திய பிரதேசம் சார்பில் ஹிமான்ஷு மந்திரி 265 பந்துகளில் 126 ரன்கள் எடுத்திருந்தார். விதர்பா தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் யாஷ் தாக்கூர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 






சிறப்பாக அமைந்த 2வது இன்னிங்ஸ்: 


மோசமான முதல் இன்னிங்ஸுக்கு பிறகு விதர்பா இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியது. அந்த அணி ஆல் அவுட்டாகும் போது 402 ரன்கள் எடுத்தது. விதர்பா அணி சார்பில் யாஷ் ரத்தோர் 200 பந்துகளில் 18 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 141 ரன்கள் எடுத்திருந்தார். இதுபோக, கேப்டன் அக்‌ஷய் 139 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கலும், அமான் 59 ரன்களும் எடுத்திருந்தனர். பதிலுக்கு மத்திய பிரதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்கள் மட்டும் எடுக்க, விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: 






இந்தாண்டு ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது வருகின்ற மார்ச் 10ம் தேதி முதல் நடைபெற உள்ளது. விதர்பா அணிக்குமுன், தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.