இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 2007ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை இந்திய அணியில் அவ்வபோது வருவதும் போவதுமாக இருந்த ரோஹித் சர்மா, 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபிக்கு பிறகு தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், நீண்ட தூரம் சிக்ஸ் அடிக்கும் திறன் ஆகிவற்றால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவர் அதிரடியாக சிக்ஸர்களை அடிப்பதற்காக இந்திய ரசிகர்களால் 'ஹிட்மேன்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இந்தநிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி மார்ச் 7 முதல் தரம்சாலாவில் தொடங்க உள்ளது, இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு வரலாற்று சாதனையை பதிவு செய்ய முடியும். இதன்மூலம், இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனையை ரோஹித் சர்மா அடைய இன்னும் சில படிகள் மட்டுமே உள்ளன.
600 சிக்ஸர்களை அடிக்கப்போகும் முதல் வீரர் ரோஹித் சர்மா:
ரோஹித் சர்மா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை மொத்தம் 594 சிக்சர்களை அடித்துள்ளார். இவர் 600 சிக்ஸர்களை கடக்க இன்னும் 6 சிக்ஸர்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 'ஹிட்மேன்' என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா இந்த சாதனையை படைக்கலாம். ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 323 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேபோல், 58 டெஸ்ட் போட்டிகளில் 81 சிக்ஸர்களும், 151 டி20 போட்டிகளில் 190 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
உலகிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் ரோஹித் ஏற்கனவே மற்ற கிரிக்கெட் வீரர்களை முந்தி தற்போது முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 553 சிக்சர்களை அடித்துள்ளார். 476 சிக்ஸர்களை அடித்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி மூன்றாவது இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ரோஹித், ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் முதலிடத்தை எட்ட முயற்சித்து வருகிறார்.
மற்றொரு சாதனையும் காத்திருப்பு:
தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது பெயரில் மற்றொரு சாதனையை படைக்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 50 சிக்ஸர்கள் என்ற கணக்கை எட்ட இன்னும் ஒரு சிக்ஸர் மட்டும் தேவையாக உள்ளது. அதனையும் இங்கு பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 31 போட்டிகளில் 53 இன்னிங்ஸ்களில் விளையாடி 49 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்தில் உள்ளார். அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 78 சிக்சர்களை அடித்துள்ளார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் 10 சிக்ஸர்கள் அடித்தால் இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவார்.