Ravindra Jadeja: காயத்தில் இருந்து மீண்டு வந்த ரவீந்திர ஜடேஜா ரஞ்சிக்கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். 


வியாழன் அன்று அதாவது இன்று (26/01/2023) ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சால் அவர் வெறும் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இரண்டாவது இன்னிங்ஸில் தமிழகத்தை 133 ரன்களுக்கு கட்டுப்படுத்த உதவியது.  மேலும் இந்த போட்டி ஜடேஜாவுக்கு மிகவும் பிடித்த சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 


ஐந்து மாத காயத்திற்குப் பிறகு, ரவீந்திர ஜடேஜா மீண்டும் களத்துக்கு வெற்றிகரமாகத் திரும்பினார்,  இன்று நடந்த போட்டியில் அவர் மிகவும் சிறப்பான 12-ஓவர்களை வீசினார். அவர் முதல் இன்னிங்ஸை 1/48 என முடித்திருந்தார்.  ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இவர் 53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். 






ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஜடேஜா,  அந்த தொடருக்கு  முன்னதாக அவரது உடற்தகுதியை மதிப்பிடுவதற்காக சவுராஷ்டிரா அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த போட்டியில் இவரது பந்து வீச்சு இந்திய அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது, ரவீந்திர ஜடேஜாவின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் பிரதிபலிக்கும் என பலருக்கும் நம்பிக்கை எழுந்துள்ளது. 






இவரது சிறப்பான பந்து வீச்சினை சவுராஸ்ட்ரா அணி மட்டும் இல்லாமல், இந்திய அணி வீரர்களும் கொண்டாடி வருகின்றனர். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், ஐபிஎல் போட்டியில் அவர் இடம் பிடித்துள்ள சிஎஸ்கே அணியும் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் ஜடேஜாவின் சிறப்பான பந்து வீச்சினை பராட்டி பதிவிட்டுள்ளது. 


தனது சிறப்பான பந்து வீச்சினை நினைவில் கொள்ளும் விதமாக ரவீந்திர ஜடேஜா, தான் வீசிய பந்தில், தனது இன்றைய ஆட்டத்தினை வெளிபடுத்தும் விதமாக தனது ஆட்டத்தினை எழுதி தன்னுடன் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அதனை படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சீசனின் முதல் ஜெர்ரி என பகிர்ந்துள்ளார்.