10வது அண்டர் 19 ஆசியக் கோப்பை போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் தலா 4 அணிகளாக 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 


ஆசியக் கோப்பை:


அதன்படி ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஜப்பான், யுஏஇ அணிகளும் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதியில் மோதும். 


இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியையும் கண்டுள்ளது. இந்தநிலையில், நேற்று இந்திய அணி நேபாளத்துடன் மோதியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 


7 விக்கெட்டுகள்:


இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நேபாளம் அணி 22.1 ஓவரில் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்பின், இலக்கை துரத்திய போது, ​​7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அர்ஷின் குல்கர்னி 30 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் உதவியுடன் 43 ரன்களும், ஆதர்ஷ் சிங் 13 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களும் எடுத்தனர். 


இந்திய தரப்பில் லிம்பானி 7 விக்கெட்களும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லிம்பானி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் 9.1 ஓவர்கள் வீசினார், அதில் 3 மெய்டன்கள் இருந்தன. 18 வயதான லிம்பானி தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்தார். இந்தநிலையில், யார் அவர் என்று பார்ப்போம். 






யார் இந்த ராஜ் லிப்மானி..?


குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்தவர் ராஜ் லிம்பானி. அவர் பிப்ரவரி 2, 2005 இல் பிறந்தார். இந்த பந்துவீச்சாளரின் வயது வெறும் 18 ஆகும். ராஜ் லிம்பானி தொடர்ந்து 120க்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசக்கூடியவர். முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிராக இவரால் எந்த விக்கெட்களையும் எடுக்க முடியவில்லை. ஆனால், நேபாளத்துக்கு எதிராக நேற்று மீண்டும் சிறப்பாக செயல்பட்ட ராஜ் லிம்பானி 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.


இதன்மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் ராஜ் லிப்மானி, 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ராஜ் லிம்பானி இடம்பிடித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19, 2024 முதல் பிப்ரவரி 11, 2024 வரை நடைபெற உள்ளது.


உலகக் கோப்பைக்கான இந்திய U-19 அணி:


அர்ஷின், ஆதர்ஷ் சிங், ருத்ரா படேல், சச்சின் தாஸ், பிரியன்சு மோலியா, முஷீர், உதய் சஹாரன் (கேப்டன்), அவனிஷ் ராவ், சௌமி பாண்டே, முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி, ஆராத்யா சுக்லா.