இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான ரவிச்சந்திர அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஓய்வு பெற்ற அஸ்வின்:
அஸ்வின் இந்திய அணிக்காக 14 ஆண்டுகளாக விளையாடி பல போட்டிகளில் ஆடி பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார், குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கிற்கு கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் சுழலுக்குத் தலைமை தாங்கி வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல போட்டிகளில் தனி ஆளாக தனது அபார பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
முரளிதரனுக்கு அடுத்து அஸ்வின்தான்:
சர்வதேச கிரிக்கெட்டில் 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ஆடியுள்ள அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, இதுவரை 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுழல் ஜாம்பவன் ஷேன் வார்னேவும் இதுவரை 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர் என்ற பெருமையை மற்றொரு தமிழரான முரளிதரன் தன்வசம் வைத்துள்ளார். முரளிதரன் மொத்தம் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார். முரளிதரன் மொத்தம் 133 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், அவர் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இரண்டு வீரர்கள் தமிழர்கள் என்பது தனிப்பெருமையாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விககெட்டுகளை வீழ்த்தியவர்கள்:
- முரளிதரன் – 67 முறை
- அஸ்வின் - 37 முறை
- வார்னே - 37 முறை
- ஹேட்லீ - 36 முறை
- கும்ப்ளே - 35 முறை
- ஹெராத் - 34 முறை
- ஆண்டர்சன் - 32 முறை
- மெக்ராத் - 29 முறை
- போத்தம் - 27 முறை
டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 10 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 5வது இடத்தில் உள்ளார்.
அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 முறை 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 10 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
- முரளிதரன் – 22 முறை
- வார்னே – 10 முறை
- ஹேட்லீ - 9 முறை
- ஹெராத் – 9 முறை
- அஸ்வின் – 8 முறை