இந்தியா- பாக் கிரிக்கெட்: கொடூர வெயிட்டிங்கில் ரசிகர்கள்.. பிவிஆரில் 80% டிக்கெட் இப்போதே காலி!
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து நாளை களமிறங்குகிறது.

டி20 உலகக் கோப்பையில் இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான இன்று ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணியின் வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் ஐசிசி தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்றிவிடும். அந்தவகையில் நாளைய போட்டிக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகள், அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகிய அனைத்தும் பிவிஆர் தியேட்டரில் பெரிய திரையில் ஒளிபரப்பபட உள்ளது. இந்தச் சூழலில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான பிவிஆர் பெரிய திரை ஸ்கிரினிங்கிற்கு 80 சதவிகித டிக்கெட்கள் விற்பனை அடைந்து விட்டது என்று பிவிஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிவிஆர் நிறுவனம் 35 நகரங்களில் உள்ள தன்னுடைய 75 திரையரங்குகளில் போட்டியை பெரிய திரையில் திரையிடுகிறது.

மும்பை,டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பெரிய திரையில் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. மேலும் போட்டியை பார்ப்பவர்களுக்கு மைதானத்தில் இருப்பது போல ஒரு சில ஏற்பாடுகளையும் பிவிஆர் நிறுவனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் அதில் விளம்பரங்களுக்கு அதிகளவில் வசூலிக்கப்படும்.
அந்தவகையில் இம்முறையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நேரத்தில் விளம்பரம் செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் 10 விநாடிகளுக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை இம்முறை வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை தவிர ஒட்டு மொத்தமாக டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் 900 கோடி ரூபாய்க்கும், ஹாட் ஸ்டார் தளத்தில் 275 கோடி ரூபாயும் ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட அணியில் அனுபவ வீரர்கள் சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹஃபீஸ் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். நாளைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் ஷநாவாஸ் தஹானி இடம்பெறவில்லை. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 முறை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மோதியுள்ளனர். அவற்றில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ''எனக்கு வயசாகிட்டு.. நான் ஃபிட்டா இல்ல..'' பாக் வீரரிடம் மனம் திறந்த தோனி!!