ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து ப்ரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானே ஒரு இடைவெளிக்காக காத்திருந்தேன்.. நன்றி என்று பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரித்வி ஷா நீக்கம்:
சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதிலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் ப்ரித்வி ஷா. கடந்த 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய கிரிகெட் அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்றெல்லாம் ரசிகர்கள் இவரை புகழ்ந்தனர்.ஆனால் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா, 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவ்வப்போது சிறந்த முறையில் விளையாடி கவனத்தை ஈர்ப்பார்.
இச்சூழலில் இவரது உடற்தகுதி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு கடும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் தற்சமயம் அவரது மோசமான உடற்தகுதியின் காரணமாக நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடி வரும் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ப்ரித்வி ஷாவின் தற்போதைய ஃபார்ம் மற்றும் உடல் எடை மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. இதனால், அணியில் இருந்து ப்ரித்வி ஷாவை நீக்கி அவருக்கு பாடம் கற்பிக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.போட்டிக்கு முந்தைய வலைப்பயிற்சிகளில் ப்ரித்வி ஷா சரியாக கலந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அவரது உடற்தகுதியும் அணித் தேர்வர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.மூத்த கிரிக்கெட் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாக்கூர் போன்றவர்கள்கூட வலைப் பயிற்சியில் முறையாக கலந்து கொள்ளும் நிலையில் ப்ரித்வி ஷா கலந்து கொள்ளாதது மேலும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இவரை நீக்குவது நிர்வாகம் மற்றும் அணித் தேர்வர்களில் கோரிக்கை மட்டுமல்ல பயிற்சியாளர் மற்றும் அணியின் கேப்டனும் சேர்ந்து ப்ரித்வி ஷாவை அணியில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளனர்.
நானே கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்:
இது ப்ரித்வி ஷாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் தான் இதனை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ப்ரித்வி ஷா, "நானே கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையான நிலையில், உடனடியாக இன்ஸ்டாகிராம் பதிவை அழித்துள்ளார். இதனால் மும்பை அணி நிர்வாகத்துடன் ப்ரித்வி ஷா நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இனி மும்பை அணிக்குள் ப்ரித்வி ஷா மீண்டும் வருவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.