கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு, மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கருக்கு முழு சிலையை அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) முடிவு செய்துள்ளது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்தான் டெண்டுல்கரின் வாழ்க்கை தொடங்கியது. அதேபோல், 2011 ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதும் இதே மைதானத்தில்தான். இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டியும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வான்கடே மைதானத்தில்தான்.
வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் என்பதால் அதற்கு முதல் நாள், அவருக்கு பரிசளிக்கும் விதமாக ஏப்ரல் 23ம் தேதி சிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலே தெரிவிக்கையில், “ மும்பை வான்கடே மைதானத்தில் வைக்கப்படும் முதல் சிலை சச்சின் டெண்டுல்கர் சிலைதான். அந்த சிலை மைதானத்திற்குள் எங்கு வைக்கப்படும் என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “ எனக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் பயணம் இந்த மைதானத்தில் தான் ஆரம்பித்தது. இந்த மைதானத்தில் மறக்கமுடியாத நினைவுகள் என்றால் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதுதாம். அதுவும் இங்குதான் நடந்தது. அதனால்தான் இந்த இடம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சிலை வைக்க அடையாளம் காணப்பட்ட இடம் ஸ்டேடியம் வளாகத்திற்குள் உள்ள கிளப் ஹவுஸூக்கு முன்னால் இருக்கிறது. அதை மைதானத்திற்கு செல்லும் அனைவடும் எளிதில் அணுக முடியும்” என்றும் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டெண்டுல்கர் பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 1989 ம் ஆண்டு 16 வயது சிறுவனாக கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், இதுவரை இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 15,921 மற்றும் 18,426 ரன்களைக் குவித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்து மிகப்பெரிய சாதனையும் படைத்துள்ளார்.
24 ஆண்டுகள் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ள சச்சின் கடந்த 2011 ல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் 6வது முறையாக விளையாடினார். உலகக் கோப்பையை வென்ற அதே உலகக் கோப்பைதான் சச்சினின் கடைசி உலகக் கோப்பை தொடர்.
சச்சினின் முதல் சதம் எப்போது? எங்கே?
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கடவுள் என அழைக்கபடும் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் தனது முதல் சர்வதேச சதத்தினை கடந்த1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்தார். அவரின் அந்த முதல் சதம் தான் அவருக்கான முதல் ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றுத் தந்தது.
கடந்த 1990 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்த சச்சின் தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டை உலகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மாற்றப்போகிறார் என அப்போது யாரும் கணித்திருக்க கூட மாட்டார்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சச்சினுக்கு இருந்தது பெரும் நெருக்கடி, 408 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி எப்படியாவது போட்டியை சமன் செய்து விடவேண்டும் என்ற முனைப்பில் விளையாடிக் கொண்டிருந்தது.
மிகவும் நெருக்கடியில் ஆடவந்த சச்சினின் ஆட்டத்தில் இருந்த நிதானம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக கிடைத்த பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விளாசி வந்த சச்சின், தனது முதல் சதத்தினை பதிவு செய்தது மட்டுமில்லாமல், இந்தியாவினை அந்த போட்டியில் தோல்வியில் இருந்து காப்பாற்ற தனது பங்கினை மிகவும் சிறப்பாகச் செய்தார்.