2022ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை டி20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை நெதர்லாந்து எதிர்கொண்டது.
அதில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து, இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 13.5 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை நான்கு விக்கெட் இழப்புக்கு எட்டி வெற்றிபெற்றது.
போட்டியின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் வீசிய மோசமான பவுன்சரால் நெதர்லாந்து பேட்ஸ்மேன் பாஸ் டி லீட்டின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாரிஸ் ரவூப் வீசிய பவுன்சர், பாஸ் டி லீட்டின் ஹெல்மெட்டில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டதால் ஆடுகளத்தை விட்டு அவர் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அவர் வலது கண்ணின் கீழ் முகத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதன் காரணமாக, அவர் ரிட்டயர்ட் ஹர்ட்டாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாஸ் டி லீட் நலமாக இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ள பாகிஸ்தான் வீரர்கள் அவரை பார்க்க சென்றனர். 16 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
போட்டியின் தொடக்கத்திலேயே, ஷாஹீன் அஃப்ரிடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முன்னதாக, இரண்டு ஆட்டங்களில் விக்கெட் எடுக்காத அவர், இந்த போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே ஸ்டீபன் மைபர்க்கின் விக்கெட்டை கைப்பற்றினார். ஷதாப் கான் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டாம் கூப்பரை வீழ்த்தினார்.
போட்டி முழுவதுமே, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள நெதர்லாந்து பேட்ஸ்மன்கள் சிரமப்பட்டனர். இந்த போட்டியின் மூலம் இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஆடியதால், போட்டியில் அனல் பறந்தது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டங்களில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த போட்டி மூலம் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.