கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும் அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்று இன்று அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேச அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, வங்காள தேசத்தின் இன்னிங்ஸை முகமது நைம் மற்றும் மெய்தி துவங்கினர். ரன் கணக்கை துவங்கும் முன்னரே வங்காள அணி விக்கெட்டை இழக்க துவங்கிவிட்டது. 45 ரன்களை எட்டுவதற்குள் வங்காள தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது.
இதன்பின்னர் கைகோர்த்த கேப்டன் ஷ்கிப் அல்ஹசன் மற்றும் ரஹும் கூட்டணி பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடியது. இருவரும் அவசரப்படாமல் விளையாடி வந்தனர். இவர்களின் நிலையான ஆட்டம் வங்காள தேச அணியை வலுவான நிலைக்கு கொண்டுசென்றது. குறிப்பாக 25 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. சிறப்பாக ஆடிவந்த அல்-ஹசன் அரைசதம் கடந்து விளையாடிக்கொண்டு இருக்கையில், தனது விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரும் 5 விக்கெட்டுக்கு, 100 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் தனி மனிதனாக போராடிக்கொண்டு இருந்த முஸ்தஃபிர் ரஹீமும் அரைசதம் கடந்து விளையாடிக்கொண்டு இருந்தார். இவரும் தனது விக்கெட்டை இழக்க அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். இறுதியில் வங்காள தேச அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடத் தொடங்கியது. 5 ஓவர்கள் முடிந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லை என போட்டி சிறிது நேரம் தடைபட்டது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் இலக்கை நோக்கி சீராக முன்னேறிக்கொண்டு இருந்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டை 64 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த முகமது ரிஸ்வான் வெற்றிக்கு அருகில் சென்றபோது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 11வது அரைசதத்தை விளாசினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பைத் தொடரில் வங்காள அணியை 14 முறை எதிர்கொண்டு 13 முறை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.