கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும் அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்று இன்று அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேச அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, வங்காள தேசத்தின் இன்னிங்ஸை முகமது நைம் மற்றும் மெய்தி துவங்கினர். ரன் கணக்கை துவங்கும் முன்னரே வங்காள அணி போட்டியின் இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் மெய்தி தனது விக்கெட்டை நசீம் பந்து வீச்சில் இழக்க, அதன் பின்னர் வந்த லிட்டன் தாஸ் சிறப்பாக அடித்து ஆடினார். ஆனால் அவரது விக்கெட்டை அஃப்ரிடி கைப்பற்றினார். அதன் பின்னரும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழ, 45 ரன்களை எட்டுவதற்குள் வங்காள தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது.
இதன்பின்னர் கைகோர்த்த கேப்டன் ஷ்கிப் அல்ஹசன் மற்றும் ரஹும் கூட்டணி பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடியது. இருவரும் அவசரப்படாமல் விளையாடி வந்தனர். இவர்களின் நிலையான ஆட்டம் வங்காள தேச அணியை வலுவான நிலைக்கு கொண்டுசென்றது. குறிப்பாக 25 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. சிறப்பாக ஆடிவந்த அல்-ஹசன் அரைசதம் கடந்து விளையாடிக்கொண்டு இருக்கையில், தனது விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரும் 5 விக்கெட்டுக்கு, 100 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் தனி மனிதனாக போராடிக்கொண்டு இருந்த முஸ்தஃபிர் ரஹீமும் அரைசதம் கடந்து விளையாடிக்கொண்டு இருந்தார். எப்படியும் வங்காள அணி 200 ரன்களைக் கடந்து விடும் என நினைத்துக்கொண்டு இருக்கையில், ரஹிம் தனது விக்கெட்டை இழக்க, அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.
இறுதியில் வங்காள தேச அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹாரீஸ் 4 விக்கெட்டுகளும் நசீம் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். வங்காள தேச அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஹீம் 64 ரன்களும் அல்-ஹசன் 53 ரன்களும் சேர்த்திருந்தனர்.