கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவுக்கு பதிலாக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டார். 


இந்தநிலையில், உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிக்கி ஆர்தரை பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் ஆன்லைன் தலைமை பயிற்சியாளராக 2024 வரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரங்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வர மறுத்துவிட்டதாக ஊடங்கள் கூறியது.






இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும், எந்த நேரத்திலும் இந்த முடிவை பாகிஸ்தான் வாரியம் வெளியிட வாய்ப்புள்ளது. இது மட்டும் நடந்தால், கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆன்லைன் பயிற்சியாளர் என்ற பெருமையை மிக்கி ஆர்தர் பெறுவார். 


பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சக்லைன் முஷ்டாக்கின் ஒப்பந்தம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி, மீண்டும் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்தரை கொண்டு வர திட்டமிட்டார். 


ஆங்கில கவுண்டி கிரிக்கெட் அணியான டெர்பிஷையருக்கு மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதனால், முதலில் பாகிஸ்தான் அணியின் கோரிக்கையை மறுத்த மிக்கி ஆர்தர், தற்போது ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. 


2016-2019 வரை பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் இருந்தபோது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2017 இல்  இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வரலாற்று பட்டத்தை வென்றது. 


இதுகுறித்து கடந்த வாரம் நஜான் சேத்தி கூறியதாவது, “நான் தனிப்பட்ட முறையில் மிக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன், நாங்கள் 90 சதவீத பிரச்சனைகளை தீர்த்துவிட்டோம். மிக்கி எங்களுடன் இணைவார் என்ற செய்தியை மிக விரைவில் பகிர்வோம் என்று நம்புகிறோம். அவர் இங்கு வந்தவுடன் அவர் தனது சொந்த பயிற்சியாளர் குழுவை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.  






மிக்கி ஆர்தர் 2016 மற்றும் 2019 க்கு இடையில் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அப்போது நஜாம் சேத்தி பிசிபி தலைவராகவும் இருந்தார். நஜாம் சேத்தி நீக்கப்பட்ட பின்னரே மிக்கி ஆர்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது நஜாம் சேத்தி பிசிபி தலைவராகத் திரும்பியுள்ளதால், அவர் மீண்டும் மிக்கி ஆர்தரை தலைமைப் பயிற்சியாளராக விரும்பினார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, பாகிஸ்தான் அணி ஏப்ரல் மாதம் வரை எந்த ஒரு சர்வதேச போட்டியில் விளையாட அட்டவணை இல்லை.