இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி, லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் எகானா மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.


முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் முதல் ஓவரில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் எந்த ரன்களையும் குவிக்காத நிலையில், 3.2 ஓவர்கள் முடிவில் யுஸ்வேந்திர சாஹல் பந்தில் க்ளீன் போல்டாகி 11 ரன்களுடன் ஃபின் ஆலன் வெளியேறினார்.


ஃபின் ஆலனை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 91 விக்கெட்களை கைப்பற்றி இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்த பட்டியலில் 90 விக்கெட்களுடன் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 






டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:



  • யுஸ்வேந்திர சாஹல் - 91 விக்கெட்டுகள்

  • புவனேஷ்வர் குமார் - 90 விக்கெட்டுகள்

  • ரவிச்சந்திரன் அஸ்வின் -72 விக்கெட்டுகள்

  • ஜஸ்பிரித் பும்ரா - 70 விக்கெட்டுகள்

  • ஹர்திக் பாண்டியா - 64 விக்கெட்டுகள்


தொடர்ந்து 4.4 ஓவர்களில் டெவான் கான்வே  11 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  தொடர்ந்து அடுத்தடுத்தி விக்கெட்டுகள் சரிய, 5 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து 62 ரன்கள் எடுத்து திணறியது.


12.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேனை தீபக் ஹூடா பந்தில் குல்தீப் யாதவ் அட்டகாசமான ரன் அவுட் செய்தார்.


16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை நியூசிலாந்து அணி குவித்த நிலையில், நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வால் பவுண்டரிக்கு விரட்டிய  பந்தை அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடித்து அசத்தினார்.  தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 17.4 ஓவர்களில் இஷ் தீப் ஒரு ரன் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.


இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு நியூசிலாந்து அணி 99 ரன்களுக்கு சுருண்டு, 100 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.






இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி ஆரம்பவே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் 11 ரன்களிலும், கிஷன் 19 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.


தொடர்ந்து, சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிப்பாதி இந்த ஆட்டத்திலும் 13 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை திணற அடித்தனர்.


இருப்பினும், இலக்கு எளிதாக இருந்ததால், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 19.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து வெற்றியை பதிவு செய்தது இந்தியா. ஹர்திக் பாண்டியாவும் சூர்யகுமார் யாதவும் களத்தில் கடைசிவரை இருந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.