டி20 உலகக் கோப்பையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்தது.


சாம்பியன்


2007ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டி தொடரில் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றி சாம்பியன் மகுடத்தை சூடியது.
அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியும், 2010ம் ஆண்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது. 


பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2012ம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. அதைத் தொடர்ந்து 2014இல் நடந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கையும்,  பின்னர் 2016இல் வெஸ்ட் இண்டீஸும் சாம்பியன் ஆனது.  கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.


மேலும் 50 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை தொடரில் 1975ம் ஆண்டும், 1979ம் ஆண்டிலும் தொடர்ச்சியாக இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


இப்படி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் தலா 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




தொடரிலிருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்:


அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறாததால் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.


டி20 உலக கோப்பையை இரு முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர். 


தலைமை பயிற்சியாளர் விலகல்


இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடருக்கு பின்பு,  டிசம்பர் மாதத்தில் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். 




2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகளை சிம்மன்ஸ் வெற்றி பெறச் செய்தார், பின்னர் 2019 இல் இரண்டாவது முறையாக பயிற்சியாளராக திரும்பினார்.