வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 305 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் அபாரமாக விளையாடி சதம் கடந்து அசத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 306 ரன்கள் என்ற இலக்கு சேஸ் செய்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். அவை என்னென்ன?
விராட் கோலியின் சாதனை முறியடித்த பாபர்:
நேற்றைய போட்டியில் 103 ரன்கள் அடித்த போது பாபர் அசாம் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அத்துடன் அவர் விராட் கோலியின் இந்தச் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்பாக விராட் கோலி கேப்டனாக 17 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து இருந்தார். தற்போது பாபர் அசாம் கேப்டனாக 13 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.
2 முறை ஹாட்ரிக் சதங்கள் அடித்து பாபர் சாதனை:
நேற்றைய போட்டியில் சதம் கடந்ததன் மூலம் பாபர் அசாம் மற்றொரு சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக அவர் 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் சதம் விளாசியிருந்தார்.
பாபர் அசாமின் கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸ்:
158 vs இங்கிலாந்து (பிர்மிங்ஹம்)
57 vs ஆஸ்திரேலியா(லாகூர்)
114 vs ஆஸ்திரேலியா(லாகூர்)
105* vs ஆஸ்திரேலியா(லாகூர்)
103 vs வெஸ்ட் இண்டீஸ்(முல்தான்)
அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2 போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் விளாசியிருந்தார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியிலும் சதம் கடந்து இந்தச் சாதனையை படைத்துள்ளார். தற்போது வரை 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்களை அடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்