Jomel Warrican: உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளாக திகழ்வது பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆகும். பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடி வருகிறது. மிரட்டும் வாரிகன்:
முல்தான் நகரில் இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் ஜேமியல் வாரிகன். 32 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் பாகிஸ்தான் வீரர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.
முதல் இன்னிங்சில் பின்வரிசை வீரர்களின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், பாகிஸ்தானின் 2வது இன்னிங்சில் அவர்களை ஆட்டம் போட வைத்தார். முகமது ஹுரைரா, பாபர் அசாம், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், ரிஸ்வான் என பாகிஸ்தானின் டாப் ஆர்டர்களை எல்லாம் காலி செய்தார். அந்த இன்னிங்சில் மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 66 ஆண்டுகளில் முதன் முறை:
இதன் மூலம் ஜேமியல் வாரிகன் 66 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வரலாறு படைத்துள்ளார். பாகிஸ்தான் மண்ணில் 1959ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் ஆடி வருகிறது. பாகிஸ்தான் மண்ணில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை ஜேமியல் வாரிகன் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, 1959ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சன்னி ராமதின் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அதிகபட்சம் ஆகும். அந்த சாதனையை 32 வயதான வாரிகன் தற்போது முறியடித்துள்ளார். 32 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேமியல் வாரிகன் 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழல் ஆதிக்கம்: தற்போது வரை பாகிஸ்தான் அணியை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதானசே தனி ஆளாக போராடி வருகிறார். வெற்றிக்கு இன்னும் 136 ரன்கள் தேவைப்படும் நிலையில், கையில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் வசம் உள்ளது. இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபடும் சூழலி்ல், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் சஜித்கான், நோமன் அலியும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சஜித்கான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் தற்போது வரை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நோமன் அலி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.