பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே முல்தானில் நடைபெற்ற நிலையில், 3வது போட்டி ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. ராவல்பிண்டியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராட்சத காற்றாடிகள்:
3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற முல்தான் மைதானம் போல தயார் செய்து தருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேட்டுக்கொண்டுள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக மைதானத்தை தயார் செய்ய வேண்டும் என்றால், பிட்ச்சில் நன்றாக பிளவுகள் இருந்தால் பந்துகள் நன்றாக சுழலும்.
இதன் காரணமாக, போட்டி நடக்கும் ஆடுகளத்தை சூரிய வெப்பம் மட்டுமின்றி இரண்டு ராட்சத காற்றாடிகள், ஆறு ஹீட்டர்கள் பயன்படுத்தி காய வைக்கின்றனர். போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக அமைந்தால் இரு அணிகளும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றியை நிர்ணயிக்கப்போகும் சுழல்?
கடந்த டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம், ஷாகின் அப்ரீடி மற்றும் நசீம்ஷா போன்ற நட்சத்திர வீரர்களை பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு சஜித்கான், நோமன் அலி மாயாஜால சுழலைப் பயன்படுத்தி பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத்.
இதனால், அடுத்த போட்டியிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற அணியே களமிறங்குமா? அல்லது பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, நசீம்ஷாவிற்கு இடம் வழங்கப்படுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாபர் அசாம் மீண்டும் வருவாரா?
முதல் டெஸ்ட் போட்டியில் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஆமீர் ஜமால், சையம் ஆயூப் பெரியளவு சோபிக்கவில்லை. நட்சத்திர வீரரான பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போடடிக்கு அழைக்கப்பட்ட சஜித்கானும், நோமன் அலியும் இங்கிலாந்தை தங்கள் சுழலால் சுருட்டினார். 3வது போட்டியிலும் அவர்கள் தங்கள் தாக்கத்தை தொடர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த டெஸ்ட் தொடரை வெல்ல இங்கிலாந்து அணியும் முழு முனைப்பு காட்டும் என்பதால் இறுதி டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.