இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் நடைபெற்றது.
297 ரன்கள் இலக்கு:
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி கம்ரான் குலாம் சதத்தின் உதவியால் 366 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் பென் டக்கெட் சதம் அடித்து இங்கிலாந்தை வலுப்படுத்த முயற்சிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக இங்கிலாந்து அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற அகா சல்மான் 63 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் அணி 221 ரன்களை எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நோமன் அலி:
297 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்புடன் நேற்று களமிறங்கியது. முதல் நாளே 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று இங்கிலாந்து வெற்றிக்கு 261 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் புது வித முயற்சியை எடுத்தார். இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியை வீழ்த்த இரண்டே இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சஜித்கானும், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நோமன் அலியையும் மட்டுமே பயன்படுத்தி இங்கிலாந்தை திணறடித்தார்.
அபார வெற்றி:
குறிப்பாக, 38 வயதான இடது கை சுழற்பந்துவீச்சாளரான நோமன் அலியின் சுழலில் இங்கிலாந்து திணறியது. ஒட்டுமொத்த இங்கிலாந்தையும் தனது மந்திர சுழலால் கட்டுப்படுத்தினார். அவரது சுழலில் சிக்கி ஜாக் கிராவ்லி, ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கார்ஸ், ஜாக் லீச், சோயிப் பஷீர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நோமன் அலி மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்திதனார். சஜித்கான் முக்கிய பேட்ஸ்மேன்களான டக்கெட் மற்றும் ஒல்லி போப்பை வீழ்த்தினார்.
33.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 144 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால், பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக 12 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 2 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத்திற்கும் பாராட்டுகள் குவிகிறது. இதனால், இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் அடைந்துள்ளது.