முல்தான் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 297 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜாக் கிராவ்லி, டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

காற்றில் பறந்த பேட்:


இங்கிலாந்து அணியை மீட்கும் விதமாக கேப்டன் பென்ஸ்டோக்ஸ் தனி ஆளாக போராடினார். அவர் பவுண்டரிகளாகவும், ஓரிரு ரன்களாகவும் ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தபோது நோமன் அலி பந்துவீசினார். நோமன் அலி வீசிய பந்தில் இறங்கி வந்து பென் ஸ்டோக்ஸ் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால், பென் ஸ்டோக்சை கிரீசை விட்டு சில அடி தூரம் இறங்கி வந்து பேட்டை சுழற்றியபோது பேட் அவரது கையை விட்டு நழுவி வானில் பறந்து சென்றது. இதனால், பந்து விக்கெட் கீப்பர் ரிஸ்வான் கைக்குச் சென்றது.






பறிபோன விக்கெட்:

ரிஸ்வான் தனது கைக்கு வந்த பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். பென் ஸ்டோக்சும் அங்கு சறுக்கி கீழே விழுந்தார். இதனால், பரிதாபமாக ஸ்டம்பிங் ஆகி பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் 4 பவுண்டரி 34 ரன்கள் எடுத்து  7வது விக்கெட்டாக வெளியேறினார்.


கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் அவுட்டானபோது இங்கிலாந்து அணி 125 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 152 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது மூலம் பாகிஸ்தான் அணி இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.