டி-20 உலக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த முதல் அரை இறுதிப்போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது நியூசிலாந்து. இந்நிலையில், இன்று துபாயில் நடக்க இருக்கும் இரண்டாது அரை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 


இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியில் முகமது ரிஸ்வான், ஷோயப் மாலிக் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரு வீரர்களுக்கும் கடந்த புதன்கிழமை அன்று லேசான காய்ச்சல் இருந்ததாகவும், அதனால்தான் பயிற்சியில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 


இதனால், இன்று நடைபெற இருக்கும் போட்டியில் ரிஸ்வான், மாலிக் ஆகியோர் இடம் பெறுவார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டதாகவும், பாகிஸ்தான அணியின் மருத்துவ நிபுணர் அவர்கள் இருவரையும் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாகிஸ்தான் அணியின் அதிரடி ஓப்பனரான ரிஸ்வான், இந்த உலகக்கோப்பையில் கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டி வருகிறார். ஒரு வேளை, ரிஸ்வான் இன்றைய போட்டியில் களம் இறக்கப்படாமல் இருந்தால், அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் அல்லது ஃபகர் ஜமான் களமிறங்கலாம் என தெரிகிறது.


அதே போல, சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு, வெற்றியை பெற்று தந்த ஷோயப் மாலிக் மிடில் ஆர்டரில் விளையாடுபவர். ஷோயப் இல்லையென்றாலும், அது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையும்.  இதனால், இரு வீரர்களும் குணமாகி இன்றைய போட்டியில் களம் இறங்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா


பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலிய அணியும் இதுவரை டி-20 போட்டிகளில் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற உள்ள துபாய் மைதானத்திலும் பாகிஸ்தானே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.  பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் துபாய் மைதானத்தில் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 2 முறை வெற்றி பெற்றுள்ளது.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண