பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலகட்டமாக உள்ளது. உலகின் வலுவான கிரிக்கெட் அணியாக உள்ள பாகிஸ்தான் அணி தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. 


தொடர் தோல்வி:


2023ம் ஆண்டு உலகக்கோப்பை தோல்வி, தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி என மிகப்பெரிய தொடர்களில் அடுத்தடுத்த தோல்வி பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த நிலையில், ரசிகர்கள் சிலர் அணி வீரர்களின் செயல்பாடுகள் மட்டுமின்றி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விமர்சிக்கின்றனர். சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பற்றி எல்லை மீறி விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. 


எல்லை மீறுகிறார்கள்:


இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர மற்றும் இளம் பந்துவீச்சாளர் நசீம்ஷா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு ரசிகராக நீங்கள் கிரிக்கெட் பார்த்துவிட்டு சிலர் உங்களைப் பாரத்து, இந்த வீரர் இதற்கு முன்பு கிரிக்கெட்டே விளையாடியதில்லை என்று கூறலாம். வீட்டிற்கு நாங்கள் சென்றால் எங்கள் சகோதரர்களே ஆம் அவர்கள் இதற்கு முன்பு கிரிக்கெட்டே விளையாண்டதில்லை என்று கூட கருத்து தெரிவிக்கலாம். 


ஆனால், ஒரு வீரர் அதுவும் 10-15 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய வீரர்கள் உங்கள் ஆட்டத்திறன் குறித்து பேசும்போது சிலர் சரியாக பந்துவீசவில்லை, சிலர் சரியாக பேட்டிங் செய்யவில்லை அல்லது அவர்கள் என்ன தவறு செய்கின்றார்கள் என்று கூறுவது நல்லது. நீங்கள் எவ்வாறு மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறலாம். ஆனால், சில வீரர்களின் முடி இப்படி உள்ளது, அவர்கள் எப்படி பேச வேண்டும் என்று அவர்களின் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசுவதாக நான் உணர்கிறேன். அதுபோன்று எல்லை மீறுகிறார்கள். 


இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


22 வயதான நசீம்ஷா 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளையும், 27 ஒருநாள் போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும், 30 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இளம் வீரரான நசீம்ஷா முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு எதிராக ஆவேசமாக பேசியிருப்பதால் அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.