இன்று (மார்ச் 17) கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறப்பான நாள். 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் யாரும் மறக்க முடியாத சாதனையை படைத்திருந்தார். அதாவது கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். 


ஆசிய கோப்பை போட்டியின் போது மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியம் இந்த வரலாற்று தருணம் அரங்கேறியது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் குவித்து சச்சின் இந்த சாதனையை படைத்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடித்த 49வது சதம் இதுவாகும். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரராக சச்சின் டெண்டுல்கர் அன்றைய நாளில் சாதனை படைத்தார்.






44வது ஓவரில் சச்சின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசனின் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிங்கிள் எடுத்து தனது பேட்டினை உயர்த்தினார். இந்த போட்டியை பார்த்த எந்தவொரு கிரிக்கெட் ரசிகருக்கும் மறக்க முடியாத தருணம் இது. இருப்பினும், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.  நான்கு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் வங்கதேச அணி, இந்திய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


போட்டி சுருக்கம்: 


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. இதில்,  சச்சின் டெண்டுல்கர் 114 ரன்களும், விராட் கோலியும் 66 ரன்களும் குவித்து முக்கிய பங்காற்றினார். 190 ரன்களை துரத்திய வங்கதேச அணி சார்பில் தமிம் இக்பால் (70), நசீர் உசேன் (54), ஜஹ்ருல் இஸ்லாம் (53) ஆகியோர் அரைசதம் விளாசி, அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். 


ஒரு வருடம் காத்திருப்பு:


சச்சின் டெண்டுல்கர் தனது 99வது சதத்திலிருந்து 100வது சதத்தை எட்டுவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. இந்த சதத்திற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் கடந்த 2011ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது 99வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், அதன்பிறகு சச்சினால் மொத்தம் 33 சர்வதேச இன்னிங்ஸ்களில் விளையாடி அவரால் தனது 100 சதத்தை அடிக்க முடியவில்லை. இறுதியாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தனது 100வது சதத்தை அடித்து காத்திருப்புக்கு முடிவு கட்டினார். 


தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் உதவியுடன் 18426 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் உதவியுடன் 15921 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர சச்சின் டெண்டுல்கர் டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். மொத்தமாக, சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34357 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் எண்ணிக்கையும் உலக சாதனையாக உள்ளது. மொத்தமாக, சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களும், 164 அரை சதங்களும் அடித்துள்ளார்.