2014-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி. கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம் பதிவான நாள். சிறப்புமிக்க சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், செஃபெல்ட் ஷீல்டு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில், நியூ சவுத் வேல்ஸ் அணியும், சவுத் ஆஸ்திரேலியா அணியும் மோதிய போட்டியில் எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பேட்டர் பிலிப் ஹியூஸ்க்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகளாகியும், அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாததாக இருக்கின்றது. சீன் அபாட் என்ற வீரர் வீசிய பந்து பிலிப்பின் ஹெல்மெட்டையும் தாண்டி தலையை தாக்கியது. ரத்த வெள்ளத்தில் மைதானத்தில் விழுந்த பிலிப் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், எதிர்ப்பாராதவிதமாக அந்த விபத்து காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த அந்த போட்டியில், பிலிப் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் மறைந்தபோது அவருக்கு வயது 25. இதனால் 63 நாட்-அவுட் என்பது கிரிக்கெட்டில் மறக்க முடியாத ரன்களில் ஒன்றாக மாறியது. அந்த சம்பவத்திற்கு பிறகு, 2014-ம் ஆண்டு மீதம் இருந்த செஃபெல்ட் ஷீல்டு கிரிக்கெட் தொடர் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், பிலிப்பின் நினைவாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு பிலிப்பின் ஆறாவது நினைவஞ்சலி அன்று, அதே ஷெஃபெல்ட் ஷீல்டு கிரிக்கெட் தொடர் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் 63 நொடி நினைவஞ்சலியை செலுத்தி பிலிப்புக்கு மரியாதை செலுத்தினர்.
பிலிப் கடைசியாக பேட்டிங் செய்ய மைதானத்திற்கு களமிறங்கிய தினத்தை இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் நினைவு கூர்ந்தனர். இரங்கலை தெரிவித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ வாடே, தனது கையில் பிலிப்பின் முகத்தை பச்சை குத்தி இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான இன்னிங்ஸை விளையாடி தன்னை நிரூபித்த வாடேவுக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்தது மட்டுமின்றி, பிலிப் நிச்சயம் இந்த இன்னிங்ஸைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார் எனவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்