இந்தியாவின் உலகக் கோப்பை வென்ற கேப்டன் எம்.எஸ். தோனி 2019 உலகப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணிக்காக கடைசியாக இந்த நாளில் விளையாடினார். இந்த நாளை அவ்வளவு சீக்கிரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்..


முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்வதேச வாழ்க்கை அவரது சரித்திரத்தில் அல்லது அதற்கு முன்பிருந்த இந்திய கேப்டன்கள் எவராலும் சாதிக்க முடியாத சாதனைகளை படைத்து இருந்தார். அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையையும் இவரையே சாரும். 


இப்படிப்பட்ட தனி மனிதருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் கொடுக்க நினைத்தது 2019 ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைதான். கோலி தலைமையிலான இந்திய அணி எப்படியாவது அந்த கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. 


ஆனால், அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இதன் காரணமாக ஐசிசி கோப்பையை கைப்பற்றும் விராட் கோலியின் லட்சியம் கனவாய் கலந்தது. 


என்ன நடந்தது ஜுலை 10 ம் தேதி..? 


டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் (95 பந்துகளில் 67 ரன்கள்) மற்றும் ராஸ் டெய்லர் (90 பந்துகளில் 74 ரன்கள்) ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த இறுதியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 


இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். இந்திய அணி, 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி அசத்தலாக பந்து வீசி தொடக்கதிலேயே 3 விக்கெட்களை கைப்பற்ற, இந்திய அணி 91 ரன்களுக்கே 6 விக்கெட்களை இழந்தது. 


அப்போதுதான் எம்எஸ் தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் தங்கள் அணியை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வர பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். தோனி (72 பந்துகளில் 50), ஜடேஜா (59 பந்துகளில் 77) ஆகியோர் 116 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தனர்.


48வது ஓவரில் ஜடேஜாவை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட் போட்டியின் மிக முக்கியமான திருப்புமுனையாய் அமைய, ஆட்டத்தின் 49வது ஓவரில், ஸ்கொயர் லெக் பகுதிக்கு தள்ளப்பட்டதை இரண்டு ரன்களாக மாற்ற தோனி  முயற்சி செய்தார். 






மார்ட்டின் கப்டிலின் வீசியா த்ரோ நேராக ஸ்டெம்பை பதம் பார்க்க, மில்லி மீட்டர் கணக்கில் தோனி ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். 48.3 வது ஓவரில் இந்திய அணி ஸ்கோர் 216,தோனி மட்டும் அன்று ரன் அவுட் ஆகாமல் இருந்து இருந்தால் நிச்சயம் அந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 2019 உலகக் கோப்பையை வென்று இருக்கலாம். 


அதோடு மட்டுமின்றி தோனி விளையாடிய கடைசி (ஜூலை 10) சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அதுவே. அதற்கு தோனி எந்தவோரு ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவும் இல்லை.