ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவதற்கு சந்தேகமாக உள்ளது. ஆனால், விராட் கோலி என்னும் ஜாம்பவான் ஒரு ரன் மெஷின், சேஸிங்கில் அவர் முடிசூடா மன்னன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். 


அதில் ஒன்றுதான்! கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி செய்த சம்பவம். 


அப்படி என்ன செய்தார் விராட் கோலி..? 


2016 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 10 குரூப் 2வில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தொடக்க ஜோடியான ஆரொன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி 4.1 ஓவர்களில் 54 ரன்கள் எடுத்து, சிறப்பான அடித்தளம் அமைத்தது. 


16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த உஸ்மான் கவாஜாவை நெஹ்ரா வெளியேற்ற, அடுத்து உள்ளே வந்த வார்னரையும் அஸ்வின் 6 ரன்களில் அவுட் செய்தார். தொடர்ந்து, நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்மித்தை 2 ரன்களில் யுவராஜ் சிங் காலி செய்ய, 43 ரன்கள் எடுத்த பின்சை பாண்டியா அவுட் செய்தார்.  பின்னர் க்ளென் மேக்ஸ்வெல் மட்டுமே 31 ரன்கள் மட்டுமே எடுத்து சிறப்பாக விளையாட, ஆஸ்திரேலிய 160 ரன்களை பதிவு செய்தது. 






161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 12 ரன்களும், ஷிகர் தவான் 13 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா வெறும் 10 ரன்களில் வாட்சனின் பந்தில் அவுட்டானார். இங்குதான் விராட் கோலி என்னும் தனிமரம் இந்திய அணியை மீட்க ஒற்றை ஆளாக போராட தொடங்கினார். ஆரம்பத்தில் மெதுமாக இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி, ரன்னை விரட்ட தொடங்கினார். 51 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து விராட் கோலி கம்பீரமாக நிற்க அவருக்கு உறுதுணையாக யுவராஜ் சிங் 21 ரன்களும், கேப்டன் எம்.எஸ்.தோனி 18 ரன்களும் எடுத்து உதவினர். 






இறுதியாக இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது. 82 ரன்கள் குவித்த விராட் கோலியே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 


ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறுகையில், கோலியின் இன்னிங்ஸ் உண்மையிலேயே விதிவிலக்கானது என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர், "அந்த அழுத்தத்தின் கீழ் விராட் கோலியின் இன்னிங்ஸ் அற்புதமானது. கோலி மிடில் ஆர்டரில் இருந்து சரியாக களமிறங்கி, நீண்ட நேரம் களத்தில் நின்றார். விராட் ஒரு நம்பமுடியாத நாக் விளையாடினார். 160 சமமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்து செல்ல கோலியின் நம்பமுடியாத இன்னிங்ஸ் தேவைப்பட்டது" என்று தெரிவித்தார்.