இன்றிலிருந்து சரியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் கோலி, தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலுமே சதம் அடித்து அசத்திய நாள். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்ததையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கோலி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2014ம் ஆண்டு முதன்முறையாக கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஆஸ்திரேலிய தொடரை எதிர்கொண்டார். உலகப்புகழ் பெற்ற அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 517 ரன்களை குவித்து மிரட்டியது. விராட்கோலி உள்பட பெரும்பாலான இந்திய வீரர்கள் இளம் வீரர்களாகவே இந்திய அணியில் இருந்தனர்.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ஷிகர்தவான் குறைந்த ரன்களில் வெளியேற, முரளி விஜய், புஜாரா, ரஹானே பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். ரோகித் சர்மாவும் தன் பங்கிற்கு 43 ரன்கள் குவித்தார். கேப்டனாக இறங்கிய விராட்கோலி தனி ஆளாக 184 பந்துகளைச் சந்தித்து 12 பவுண்டரிகளுடன் 115 ரன்களை குவித்தார். அவரது சத்தின் உதவியால் இளம் இந்திய அணி 444 ரன்களை குவித்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 290 ரன்களில் டிக்ளேர் செய்து, இந்தியாவிற்கு 364 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியை எளிதில் சுருட்டிவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு முரளிவிஜய் ஆட்டம் காட்டினார். ஷிகர் தவானும், புஜாராவும் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் கோலி முரளி விஜயுடன் இணைந்து நங்கூரம் போல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
57 ரன்களில் ஜோடி சேர்ந்த இருவரும் 242 ரன்களில்தான் பிரிந்தனர். முரளி விஜய் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு பிறகு, களமிறங்கிய ரஹானே டக் அவுட்டானார். ரோகித் சர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தனி ஆளாக போராடிய விராட்கோலி இந்திய அணியை 300 ரன்களை கடக்க வைத்தார்.
மறுமுனையில் கிரீசில் யாரும் துணைக்கு இல்லாத நிலையில், தனி ஆளாக போராடிய கோலி 7வது விக்கெட்டாக இந்திய அணி 304 ரன்கள் குவித்தபோது ஆட்டமிழந்தார். கோலி இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 175 பந்தில் 16 பவுண்டரி 1 சிக்ஸருடன் 141 ரன்கள் குவித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் முரளி விஜய், கோலி தவிர யாரும் சிறப்பாக ஆடாததால் இந்திய அணி வெற்றியின் அருகில் வரை வந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆனாலும், அன்று 26 வயதே ஆன இளைஞன் கோலி இரு இன்னிங்சிலும் ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தது என்பதே உண்மை. அவரைப் புகழ்ந்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் கட்டுரைகளை எழுதின. முதல் இரு டெஸ்டில் தோற்றாலும், தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்தியா டிரா செய்தது. இந்த தொடரில் மட்டும் கோலி 692 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Watch Video: சத்துணவு முட்டைக்கு எதிர்ப்பு: லிங்காயத் தலைவர்களை சாடிய பள்ளிச் சிறுமி!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்