ODI World Cup Records: உலகக் கோப்பையில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.


இங்கிலாந்து - நியூசிலாந்து:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய கான்வே 152 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களையும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.


சாதனை விவரங்கள்:



  • உலகக்கோப்பையில் சதம் விளாசிய இளம் வீரர்: 23 வயது மற்றும் 291 நாட்களே ஆன ரச்சின் ரவீந்திரா உலகக் கோப்பையில் சதம் விளாசிய இளம் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதோடு, 82 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார்.

  • உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்: கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 35.1 ஓவரில் 273 ரன்கள் சேர்த்தது. இது நியூசிலாந்து அணியின் ஒரு நாள் உலகக் கோப்பை வரலாற்றில் எந்த விக்கெட்டுக்கும் இல்லாத அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.


  • உலகக் கோப்பையில் சேஸிங்கில் 150+ ரன்கள் எடுத்த முதல் வீரர்: 83 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த கான்வே, அடுத்த 38 பந்துகளில் 52 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான ரன் சேஸிங்கின் போது 150 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 158* ரன்களை சேர்த்து இருந்தாலும், அந்த போட்டி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.



  • சேஷிங்கில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்: கான்வே மற்றும் ரவீந்திரா கூட்டணி சேர்த்த 273 ரன்கள் என்பது, உலகக் கோப்பை வரலாற்றில் சேஷிங்கின் போது நடைபெற்ற அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். 2011 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிரான ரன் சேஸிங்கில், 231* ரன்கள் சேர்த்த இலங்கையின் திலகரத்னே தில்ஷன் மற்றும் உபுல் தரங்கா ஜோடியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஒருநாள் போட்டி வரலாற்றில் நான்காவது மிகப்பெரிய பார்ட்னர்ஷி ஆகும்.

  • இங்கிலாந்து படைத்த வரலாற்று சாதனை: ஒருநாள் போட்டியில் ஒரு அணியின் 11 வீரர்களும் இரட்டை இலக்கை எடுத்த அரிய நிகழ்வு நேற்று நடந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. முன்னதாக நடைபெற்ற 4,600-க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட இப்படிபட்ட நிகழ்வு நடந்ததில்லை.