ODI World Cup 2023: கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசியின் உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது.


உலகக்கோப்பை தொடர்:


ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை  கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இதில் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் அதைதொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் தொடங்கி சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதுமிருந்து ரசிகர்கள் இந்தியா வர தொடங்கியுள்ளனர்.


அணிகளும் - போட்டிகளும்:


நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா உடன்,  பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து மற்றும் தென்னாப்ரிக்கா என மொத்தம் 10 அணிகள் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


எகிறும் எதிர்பார்ப்பு:


நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியாவிற்கு வந்து இருப்பது, மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெறாதது என ஏற்கனவே இந்த உலகக்கோப்பை சுவாரஸ்யமடைந்துள்ளது. இதையடுத்து, ஏற்கனவே இருந்த பல சாதனைகளை தகர்ப்பது, இதுவரை இல்லாத புதிய சாதனைகளை படைப்பது, இறுதி பந்து வரையில் போட்டிகள் நீள்வது, சூப்பர் ஓவர், திரிலிங்கான பினிஷிங், பெரிய அணிகளை வீழ்த்தி சிறிய அணிகள் வெற்றி பெறுவது, அதிரடியான பேட்ட்ங் மற்றும் திணறடிக்கும் பவுலிங் என பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நிகழ வாய்ப்புள்ளது. இதனால், இந்த உலகக் கோப்பை மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


ரசிகர்களுக்கான விருந்து:


இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகின்றன. 4 நாட்களில் மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அன்றைய தேதிகளில் முதல் போட்டி காலை 10.30 மணியளவிலும், இரண்டாவது போட்டி வழக்கம்போல 2 மணிக்கு நடைபெறும். போட்டிகளின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். கூடுதலாக, ரசிகர்களை கவரும் விதமாக ஹாட்-ஸ்டார் செயலியில் உலகக்கோப்பை போட்டிகளை கட்டணமின்றி காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பரிசு விவரங்கள்:



  • சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்

  • இறுதிப்போட்டியில் தோல்வியுறும் அணிக்கு 2 மில்லிய அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்

  • அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6.65 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்

  • நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறாத 6 அணிகளுக்கு தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்

  • லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 40 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும்