Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டில் இந்திய வீரர், விராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி:
ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டு கொண்டாடப்படுகிறது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளையுடன் இந்த விளையாட்டு திருவிழா முடிய உள்ளது. முதல் நாள் முதலே இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போது 90-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியா புதிய சாதனை:
ஆசிய விளையாட்டில் ஒரு எடிஷனில் 16 தங்கப் பதக்கங்களை வென்றதே இந்தியாவின் சிறப்பான செயல்பாடாக இருந்தது. ஆனால், இந்த முறை தற்போது வரையுமே 22 தங்கப் பதக்கங்களை வென்று, இந்திய வீரர், வீராங்கனைகள் புதிய வரலாறு படைத்துள்ளனர். இந்தியாவிற்கான பதக்கங்களை வென்றவர்களில் 10-க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர். தற்போது வரை இந்தியா மொத்தமாக 95 பதக்கங்களை வென்றுள்ளது. இதில், 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். நாளைக்குள் இந்த எண்ணிக்கை 100-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதக்கப்பட்டியல்:
நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
சீனா | 187 | 104 | 63 | 354 |
ஜப்பான் | 47 | 57 | 65 | 169 |
தென்கொரியா | 36 | 49 | 84 | 1169 |
இந்தியா | 22 | 34 | 39 | 95 |
உஸ்பெகிஸ்தான் | 20 | 18 | 26 | 64 |
தைவான் | 17 | 16 | 25 | 58 |
வடகொரியா | 11 | 18 | 10 | 39 |
தாய்லாந்து | 10 | 14 | 30 | 54 |
பஹ்ரைன் | 10 | 3 | 5 | 18 |
கஜகஸ்தான் | 9 | 18 | 41 | 68 |
நேற்று வென்ற பதக்கங்கள்:
-
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இறுதிப் போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான நேரடியாக தகுதி பெற்றது.
- ராஜு தோலானி, அஜய் பிரபாகர் கஹ்ரே, ராஜேஷ்வர் திவாரி மற்றும் சுமித் முகர்ஜி ஆகியோர் கொண்ட இந்திய ஆண்கள் அணி பிரிட்ஜ் பிரிவில் வெள்ளி வென்றது.
- முன்னதாக, ரிகர்வ் வில்வித்தை மகளிர் அணி பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வியட்நாமை வீழ்த்தி இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. அதேநேரம், தென் கொரியாவை வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
- பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதியில் சீனாவின் லி ஷிபெங்கிடம் 16-21, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.
- பெண்களுக்கான செபக்டக்ராவில் இந்தியா, அரையிறுதியில் தாய்லாந்திடம் 2-0 (21-10, 21-13) என்ற கணக்கில் தோல்வியடைந்து. மகளிர் ரெகு போட்டியில் வெண்கலம் வென்ற பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது
- சோனம், கிரண் மற்றும் அமன் ஆகியோர் மல்யுத்தபோட்டியில் தங்களுடைய ரெப்சேஜ் வெண்கலப் பதக்கப் போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
எதிர்பார்க்கப்படும் பதக்கங்கள்:
இதனிடையே, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மகளிர் கபடி அணியும் இறுதிப்போடிக்கு முன்னேறியுள்ளதால், குறைந்தபட்சம் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. சாத்விக்-சிராக் ஜோடி இரட்டையர் பிரிவு பேட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இன்று தங்கத்திற்காக விளையாட உள்ளது. இதெபோன்று வில்வித்தை, ரோலர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் இந்திய அணி பதக்கங்களுக்காக களமிறங்க உள்ளது.