இந்தியாவில் நடப்பாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக பல்வேறு கட்டங்களாக டிக்கெட் விற்பனை நடைபெற்ற நிலையில் மீதமுள்ள டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியது. 


பொதுவாக எத்தனை வகையான விளையாட்டு போட்டிகள் இருந்தாலும் கிரிக்கெட்  விளையாட்டுக்கு இருக்கும் ரசிகர் கூட்டமே தனி தான். எந்த வகையான போட்டியாக இருந்தாலும், எந்த அணியாக இருந்தாலும் பரவாயில்லை. போட்டியை பார்த்தால் போதும் என்ற அளவில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர்.அதேசமயம் டிவி, ஒடிடி தளங்களில் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பினாலும், நேரில் சென்று பார்ப்பதே தனி சுவாரஸ்யம் தான்.


அந்த வகையில் ஐபிஎல் , ஆசிய கோப்பை தொடர்கள் முடிந்து விட்ட நிலையில் அடுத்தது ரசிகர்களின் பார்வையெல்லாம்  50 ஓவர் உலகக்கோப்பை தொடரை நோக்கி திரும்பியுள்ளது. அதுவும் 13வது உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற 2 உலகக்கோப்பை தொடரிலும் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இம்முறை உள்ளூரில் போட்டிகள் நடைபெறும் என்பது இந்திய அணிக்கு சாதகம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 






இந்தியாவின் 10 நகரங்களில் உலகக்கோப்பைக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த மாத இறுதியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. புக் மை ஷோ இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் போட்டிப்போட்டதால் இணையதளம் சர்வர் பிரச்சினையும் ஏற்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. 


இந்நிலையில் நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளுக்கான பொது டிக்கெட் விற்பனை செப்டம்பர் 8 ஆம் தேதியான (இன்று) தொடங்கியது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு புக் மை ஷோ தளத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து போட்டிகளுக்கும்  பொதுவான டிக்கெட் பிரிவில் மொத்தமாக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பிசிசிஐ. திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், விறுவிறுவென காலியானதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.