உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் அரையிறுதியை உறுதி செய்துள்ள நிலையில், இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ள இலங்கை - வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.
டைம் அவுட்டில் மேத்யூஸ் அவுட்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இலங்கை அணியின் 4வது விக்கெட்டாக சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு 5வது விக்கெட்டுக்கு இலங்கை அணியின் மூத்த வீரர் மேத்யூஸ் களமிறங்கினார். அவருடைய ஹெல்மெட் சேதமடைந்த காரணத்தால் அவர் களத்திற்குள் வருவதற்கு தாமதம் ஆனது. கிரிக்கெட் விதிப்படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த பிறகு அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்திற்குள் மைதானத்திற்குள் வர வேண்டும். அப்படி வராவிட்டால் எதிரணி அந்த பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததாக முறையிடலாம்.
விதிகள் சொல்வது என்ன?
மேத்யூஸ் வருவதற்கு தாமதமான காரணத்தால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் அம்பயர்களிடம் முறையிட்டனர். கிரிக்கெட் விதிப்படி, 2 நிமிடமாகியும் ஒரு பேட்ஸ்மேன் வராவிட்டால் அவுட் என்பதால் மேத்யூஸ் அவுட் என்று கூறப்பட்டது. இதனால், மேத்யூஸ் மற்றும் இலங்கை அணியும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம், எதிரணியினர் தங்களது கோரிக்கையை திரும்ப பெற்றால் அந்த பேட்ஸ்மேன் ஆடலாம்.
மேத்யூஸ் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனிடம் காரணத்தை விளக்கமாக கூறினார். ஆனாலும், அதைக் கேட்காத ஷகிப் அல் ஹசன் தாங்கள் விதியை கண்டிப்பாக கடைபிடிப்போம் என்று கூறினார். இதனால், வேறு வழியில்லாமல் மேத்யூஸ் களத்தை விட்டு வெளியேறினார். உலக கிரிக்கெட் வரலாற்றிலே டைம்ட் அவுட் முறையில் ஒரு வீரர் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை ஆகும்.
கடும் சர்ச்சை:
மற்ற விளையாட்டுகளை போலவே கிரிக்கெட்டிலும் பல கடுமையான விதிகள் இருப்பினும், கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்றே கருதப்படுவதால் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடும் இரண்டு அணி வீரர்களுமே ஜென்டில்மேனாக ஆடவே விரும்புவார்கள்.
கிரிக்கெட்டில் ஆக்ரோஷம், வீரர்களிடையேயான மோதல்கள் சமீபகாலமாக அதிகரித்து காணப்பட்டாலும் விளையாடுவது விதிப்படியே விளையாடி வருகிறார்கள். மன்கட் முறையில் அவுட்டாக்குவது போன்ற பேட்ஸ்மேனை அவுட்டாக்குவது போன்ற முறைகள் விதிகளுக்குட்பட்டது என்றாலும், அறத்திற்கு அப்பாற்பட்டது என்று கருதி பீல்டிங் செய்யும் அணிகள் அதைச் செய்வதில்லை.
ரசிகர்கள் கண்டனம்:
ஆனால், இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தன்னுடைய ஹெல்மெட் சேதம் அடைந்த காரணத்தால் தான் களமிறங்க தாமதம் ஆகியது என்று மேத்யூஸ் விளக்கம் அளித்தும், அதை மற்றொரு மூத்த அனுபவமிக்க வீரரான ஷகிப் அல் ஹசன் ஏற்க மறுத்தது இலங்கை அணி மட்டுமின்றி கிரிக்கெட்டை நேர்மையாக ஆட நினைக்கும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலே ஒரு வீரர் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறுவதும், உலகக் கோப்பை வரலாற்றில் டைம் அவுட் முறையில் ஒரு வீரர் அவுட்டாகி வெளியேறுவதும் இதுவே முதன்முறை ஆகும். மேத்யூஸ் எதிரணி கேப்டனிடம் விளக்கம் அளித்தும், அதை ஷகிப் அல் ஹசன் ஏற்க மறுத்த வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஷகிப் அல் ஹசனையும், வங்கதேச அணி வீரர்களையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
225 ஒருநாள் போட்டிகள், 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மேத்யூஸ் தன் கிரிக்கெட் வாழ்வில் முதன்முறையாக இவ்வாறு ஆட்டமிழந்து விரக்தியுடன் வெளியேறியது ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். மேத்யூஸ் இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 40 அரைசதங்கள், 122 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்து 900 ரன்களையும் எடுத்துள்ளார்.