ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தேதியை மாற்றக்கோரி, 3 உறுப்பு நாடுகள் கோரிக்கை வைத்துள்ளதாக பிசிசிஐ செயலாலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ ஆலோசனை:
நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக்கோப்பை தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பையை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய் ஷா ஆலோசனை நடத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஜெய் ஷா செய்தியாளர் சந்திப்பு:
அந்த வகையில், “ உலகக்கோப்பை போட்டி தேதிகளை மாற்றுமாறு சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. போட்டிகளுக்கு இடையே குறுகிய கால இடைவெளி மட்டுமே இருப்பதால், போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மூன்று முழு நேர உறுப்பு நாடுகளே கோரிக்கை வைத்துள்ளன. அதேநேரம், குறிப்பாக இது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி தொடர்புடையது அல்ல. உலகக்கோப்பை போட்டியின் போது பார்வையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் ஜெய்ஷா விளக்கமளித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அந்த தேதிகளில் பயணம் மற்றும் ஓட்டல் அறைகள் முன்பதிவு ஆகியவற்றில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நடத்தினால், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி தேதி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான், ஐசிசி உறுப்பு நாடுகளே போட்டி தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதனால், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை தொடர்:
கடந்த மாதம் வெளியான அட்டவணையின்படி, ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், இறுதிப்போட்டியில் கோப்பையை பறிகொடுத்த நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன. லீக் போட்டிகள் நவம்பர் 12-ந் தேதி முடிவுறும் நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி மும்பையில் நவம்பர் 15-ந் தேதியும், 2வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 19-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.