உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 


13வது உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இந்த தொடரில் களம் கண்டுள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் போட்டி நடந்து வரும் நிலையில் இதுவரை 25 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்வதால் ரசிகர்கள் அடுத்து வரும் போட்டிகளையும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


அந்த வகையில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறுகிறது. 


சொதப்பும் பாகிஸ்தான்


பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை தோற்கடித்து கம்பீரமாக தொடங்கியது. ஆனால் அடுத்ததாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்று பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியிடன் படுதோல்வி அடைந்தது அந்த அணியை கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்று பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


அந்த அணியின் பேட்டிங் பலமாக இருந்த போதிலும், மோசமான சுழற்பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவை பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டமும் சென்னை மைதானத்தில் தான் நடைபெற்றது என்பதால் ஓரளவு மைதானம் பற்றிய கணிப்பை கொண்டு இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற போராடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 


அதிரடி எழுச்சி கண்ட தென்னாப்பிரிக்கா 


உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்கா அணி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த அணி நெதர்லாந்து எதிரான ஆட்டத்தில் மட்டும் தோல்வியை தழுவியது, ஆனால் இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளை வீழ்த்தி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. நிச்சயம் அரையிறுதிக்கும் அந்த அணி செல்லும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகள் 300 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்துள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுவாக உள்ள தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் சமாளிப்பது சற்று கடினம் என்பதால் இப்போட்டி கண்டிப்பாக விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பது நிதர்சனம். இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 1 நேரலை செய்கிறது.