உலகக் கோப்பைத் தொடரில் மிகவும் முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய நியூசிலாந்து ரவீந்திராவின் அபார சதம், வில்லியம்சனின் அதிரடி பேட்டிங்கால் 50 ஓவர்களில் 401 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து 402 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. 


பாகிஸ்தான் அபார வெற்றி:


தொடக்க வீரர் அப்துல்லா 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பகர் ஜமான் - கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். பாபர் அசாம் நிதானமாக ஆட, பகர் ஜமான் அதிரடியாக ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அவர் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். அவர் 60 பந்துகளில் 100 ரன்களை விளாசி அதிரடி சதம் விளாசினார். இதனால், பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென ஏறியது. இந்த நிலையில், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 


இதையடுத்து, 41 ஓவர்களில் 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் டி.ஆர்.எஸ். முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்படி, நியூசிலாந்து அணியை விட பாகிஸ்தான் 21 ரன்கள் அதிகமாக எடுத்திருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


பகர் ஜமான் மிரட்டல் சதம்: 


சிறப்பாக ஆடி 81 பந்துகளில் 8 பவுண்டரி 11 சிக்ஸருடன் 126 ரன்கள் விளாசிய பகர் ஜமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது கடினம் என்றே அனைவரும் கருதிய நிலையில், தொடக்க வீரர் பகர் ஜமான் மன உறுதியுடன் அதிரடியாக ஆடினார். ஒருநாள் போட்டியில் ஏற்கனவே இரட்டை சதம் அடித்த பகர் ஜமான் இந்த போட்டி தொடங்கிய முதல் சிக்ஸர் மழை பொழிந்தார்.


அவருக்கு கேப்டன் பாபர் அசாம் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். போட்டி நடைபெற்ற பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்தின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பாகிஸ்தான் பேட்டிங் செய்த 25 ஓவர்களில் ட்ரென்ட் போல்ட். சவுதி, சான்ட்னர், பிலிப்ஸ், சோதி மற்றும் மிட்செல் என 6 பந்துவீச்சாளர்களை வில்லியம்சன் பயன்படுத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை.


டாப் 4க்குள் நுழைய தீவிரம்:


இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த நியூசிலாந்து அடுத்தடுத்து 4 வெற்றிகளை பெற்ற நிலையில், கடைசியாக ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளனர். இது அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோற்றாலும், பாகிஸ்தான் அணியுடன் சம புள்ளிகை பெற்றுள்ள நியூசிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளது.


ரன் ரேட் முக்கியம்:


பாகிஸ்தான் அணி தற்போது 8 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் வெற்றி 4 போட்டிகளில் தோல்வி என 8 புள்ளிகளுடன் ப்ளஸ் 0.036 ரன்ரேட்டுடன் உள்ளது. நியூசிலாந்த அணி 8 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் ப்ளஸ் 0.398 ரன் ரேட்டுடன் 4வது இடத்தில் உள்ளது.


உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி முதல் அணியாக தகுதி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவின் வாய்ப்பும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கடைசி 2 இடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 4வது இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் கடும் போட்டி நிலவுகிறது.


பாகிஸ்தான் அணி தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இனி வரும் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணி தங்களுடைய அடுத்த போட்டியில் இலங்கை அணியை நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டியதும் அவசியம் ஆகும்.


பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுடன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளும் அரையிறுதி வாய்ப்புக்கு மல்லுக்கு நிற்கிறது. அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே இவர்களின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.