NZ vs PAK Innings Highlights: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி 401 ரன்களை சேர்த்தது.


நியூசிலாந்து - பாகிஸ்தான் மோதல்:


உலகக் கோப்பையின் 35வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 7 லீக் போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலந்ந்து, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது.


சிறப்பான தொடக்கம்:


தொடக்க ஆட்டக்காரரகளாக களமிறங்கிய கான்வே மற்றும் ரச்சீன் ரவீந்திரா கூட்டணி பொறுப்பான ஆட்டத்த வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்த கூட்டணி 50 ரன்களை கடந்தது. 35 ரன்கள் எடுத்து இருந்தபோது ஹசன் அலி பந்துவீச்சில் கான்வே ஆட்டமிழந்தார். கான்வே மற்றும் ரச்சீன் ரவீந்திரா கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 68 ரன்களை சேர்த்தது.


மிரட்டிய ரவீந்திரா - வில்லியம்சன் கூட்டணி:


இதையடுத்து இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் ரவீந்திரா கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தள்ளாட, அவர்களது பந்துவீச்சை வில்லியம்சன் மற்றும் ரவீந்திரா அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு விரட்டினர். இதனால் நியூசிலாந்தின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அடுத்தடுத்து இருவரும் அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய ரவீந்திரா சதம் விளாசினார். வில்லியம்சனும் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 95 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார். 


சின்னசாமியில் பொழிந்த ரன்மழை:


இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மிட்செல் 18 பந்துகளில் 29 ரன்களையும், சாப்மேன் 27 பந்துகளில் 39 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் கிளென் பிலிப்ஸும் தனது பங்கிற்கு அதிரடி காட்டினார். 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 25 பந்துகளில் 41 ரன்களை குவித்து வெளியேறினார். 


பாகிஸ்தானுக்கு ரன்கள் இலக்கு:


இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக மொகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசன் அலி, இஃப்திகார், ஹரிஸ் ராஃப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தான் அணி அரையிறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இதனால், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 402 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.