NZ vs SL Highlights: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டிகளில் ஒன்றாக இன்றைய போட்டி பார்க்கப்பட்டது.
இந்த தொடரின் தொடக்கத்தில் மிகவும் வலுவான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்து அணி அதன் பின்னர் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால் நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இப்படியான நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 171 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மொத்தம் 7 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. போல்ட் மூன்று விக்கெட்டுகளும் சாண்ட்னர், ஃபெர்குசன் மற்றும் ரவீந்திரா தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இலங்கை அணியின் தீக்ஷனா 91 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அதன் பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் ’லட்டு போல பந்து வீசினார்கள்’. பொதுவாகவே பெங்களூரு மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். இங்கு நியூசிலாந்து அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிறிய இலக்கு என்பது அவர்களுக்கு ஏதோ வார்ம்-அப் மேட்ச் விளையாடுவதைப் போல் இருந்தது. இதனால் நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி சிறப்பாக முன்னேறிச் சென்றது.
குறிப்பாக இலங்கை அணி தரப்பில் வீசப்பட்ட அனைத்து ஓவரிலும் குறைந்தபட்சம் ஒரு பவுண்டரியாவது விளாசினர் நியூசிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளேவிற்குப் பிறகு அரைசதத்தினை எட்டும் தருவாயில் தங்களது விக்கெட்டினை அடுத்தடுத்து இழந்தனர். ஆனால் இவர்களின் விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி வெற்றியை எட்டுவதில் எந்தவிதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இலங்கை அணி தரப்பில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் கைப்பற்றினர். இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தால் போட்டி சுவாரஸ்யமாக சென்றிருக்கும்.
நியூசிலாந்து அணி தரப்பில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி வெற்றியை எளிதில் எட்டவேண்டும் எனும் முனைப்பில் இருந்தனர். வெற்றியை விரைவில் எட்டினால் புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையிலும் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்க முடியும் என்பதால் அரையிறுதியை நோக்கமாகக் கொண்டு விளையாடினர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பினை சற்று பிரகாசமாக்கியுள்ளது. நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதா என்பதை பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவைப் பொறுத்துதான் கூறமுடியும்.