உலகக் கோப்பை கிரிக்கெட் 2023இன் 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் 10 அணிகளில் 8 அணிகள் ஏற்கனவே தலா ஒரு போட்டியில் விளையாடிய நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனது முதல் போட்டில் களம் இறங்கின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து, 49.3 ஓவர்கள் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலககுடன் இந்திய அணி களமிறங்கியது. 200 ரன்களை இந்திய அணி 25 முதல் 30 ஓவர்களில் சேஸ் செய்து விடுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருந்தனர். இவர்கள் மனதில் இடியை இறக்கியதைப் போல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என மூன்று பேரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். இது இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இவர்களுக்கு அடுத்து இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் இணைந்து இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்டனர். இவர்களின் கூட்டணியை பிரிக்க ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. உடனே கிடைத்த வாய்ப்பையும் மிட்ஷெல் மார்ஷ் வீணடிக்க இந்திய அணி பக்கம் ஆட்டம் மெல்ல மெல்ல வந்தது.
இருவரும் இணைந்து 16வது ஓவரில் இந்திய அணியை 50 ரன்களை கடக்க வைத்து விளையாடினர். சிறப்பாகவும் பொறுப்புடனும் விளையாடி இந்த கூட்டணியினை பிரிக்க வந்த ஆடம் ஜம்பாவின் ஓவரில் கே.எல். ராகுல் மூன்று பவுண்டரிகள் விளாசி மிரட்டினார். இவர்களின் கூட்டணியால் இந்திய அணி மெல்ல் மெல்ல சரிவில் இருந்து மீட்டது மட்டும் இல்லாமல், இந்திய அணிக்கு வெற்றியை எட்டுவதற்கான நம்பிக்கையை அளிக்கும் வகையில் விளையாடினர்.
விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் அடுத்தடுத்து அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடி வந்தனர். இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியது. இருவரும் ஓவருக்கு மூன்று முதல் ஐந்து ரன்கள் வரை சேர்த்து வந்தனர். இதனால் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 120 ரன்கள் சேர்த்தது. இதனால் 20 ஓவர்களில் இந்தியா வெற்றி பெற 80 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
விராட் கே.எல். ராகுல் கூட்டணியை பிரிக்க ஆஸ்திரேலிய அணியின் அனைத்து முயற்சிகளையும் இவர்களின் அனுபவம் சின்னாபின்னமாக்கியது. 80 ரன்களைக் கடந்த விராட் கோலி சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 116 பந்தில் 85 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். விராட் தனது விக்கெட்டினை இழந்த போது ஒட்டுமொத்த மைதானமும் நிசப்தத்தில் மூழ்கியது. ராகுல் மற்றும் விராட் பார்ட்னர்ஷிப்பில் 165 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா கே.எல். ராகுலுக்கு ஒத்துழைப்பு தர இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த கேல்.எல். ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி 97 ரன்கள் எடுத்து சதத்தை 3 ரன்களில் நழுவவிட்டார்.