ODI World Cup 2023: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த தொடர் ஐசிசியுடன் ஒரு நாடு தனியாகவோ அல்லது இரண்டு மூன்று நாடுகள் இணைந்தோ கூட நடத்தும். இம்முறை வரும் அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளும் தயாராகிக்கொண்டு உள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டும் வரை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றி மிகவும் வலுவான அணியாக எப்போதும் இருக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த முறை உலகக்கோப்பைச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு இந்திய தீவுகள் அணி ஹாட்ரிக் கோப்பை வெல்ல தயாராக இருந்ததை முறியடித்து இந்தியாவுக்காக முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், இந்திய அணி இம்முறை உலகக்கோப்பையை வெல்ல தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து கபில் தேவ் கூறியிருப்பதாவது, “இந்திய அணி டாப் 4 இடங்களுக்குள் வருவது மிகவும் முக்கியமானது. இந்திய அணி மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. இந்திய அணி இந்த தொடர் முழுவதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடுவது மிகவும் முக்கியம்.
இந்திய அணி ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுழற்பந்து வீச்சாளர்களை முழுமையாக நம்பி இருந்தது. ஆனால் இப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணி தற்போது உலகின் எந்த கண்டத்திற்குச் சென்று விளையாடினாலும், இந்திய அணியால் மற்ற அணிகளை ஆல் அவுட் செய்ய முடியும் எனும் அளவிற்கு பலமாக உள்ளது.
இந்திய அணி எதிர் அணி வீரர்களை 30 ரன்களுக்குள் அவர்களின் விக்கெட்டை கைப்பற்றவேண்டும். அப்போதுதான் இந்திய அணிக்கு வெற்றி எளிதாகும். அதேபோல் ஒரு அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் என்பது அந்த அணிக்கு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். அதாவது, ஒரு அணியில் இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலே அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிடும். எனவே வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களை விரைவில் குணப்படுத்துவதிலும் அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படவேண்டும்.
இந்திய அணியின் தொடக்க வீரராக உள்ள சுப்மன் கில் மிகவும் திறமையான வீரராக உள்ளார். அவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக உள்ளார். இவ்வளவு திறமையான விரர் இந்திய அணியில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. உலகக் கோப்பைக்கான சிறந்த இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வாளர்களுக்கு எனது பாராட்டுக்கள். அணியில் இல்லாதவர்கள் குறித்து பேசி என்ன பயன். தேர்வாளர்கள் எங்களை விடவும் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் தலையை வைத்து அணியை தேர்வு செய்கிறார்கள். அணியில் இல்லாதவர்களை அப்படியே விட்டுவிடுங்கள், அவர்கள் குறித்த புள்ளி விபரங்களை கூறுவது எளிது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” இவ்வாறு இந்திய அணி குறித்து கபில் தேவ் கூறியுள்ளார்.