ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி நேற்று 2023 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும், இந்த வெற்றிக்கு பிறகும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியிடம் தோற்று ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீண்டும் ஒருநாள் போட்டியில் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றம் கண்டுள்ளது. 


ஆசிய கோப்பை சூப்பர்-4ல் கடைசி இடத்தில் இடம் பிடித்தாலும் பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டு சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றியால் பாகிஸ்தான் அணிக்கு பலன் அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து, ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணி சரிவை கண்டது. இதன்மூலம், பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது.






இரண்டாவது இடத்தில் இந்தியா:


ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114.659 ரேட்டிங்கை பெற்று 2வது இடத்தில் உள்ளது. அதேசமயம் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி 114.889 ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஆசியக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி செப்டம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை அடைய முடியும். அதே சமயம் இந்த தொடரின் மூலம் இந்திய அணியை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா அணியும் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு வரலாம். 






மற்ற அணிகளின் நிலையும் இதுதான் 


பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 113 ரேட்டிங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா 106 மதிப்பீடுகளையும் 2,551 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 105 மதிப்பீட்டையும் 2,942 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 


டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது 


ஐசிசி டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டி20யில் இந்தியா 264 ரேட்டிங் மற்றும் 15,589 புள்ளிகள் மற்றும் டெஸ்டில் 118 ரேட்டிங் மற்றும் 3,434 புள்ளிகள் பெற்றுள்ளது. அதேசமயம் டி20 சர்வதேச தரவரிசையில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும், டெஸ்டில் ஆறாவது இடத்திலும் உள்ளது.