ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கும் போட்டித் தொடர் என்றால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காகத்தான். ஆசியக் கோப்பைக்காக விளையாடும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் என மொத்தம் 5 அணிகளும், இவை இல்லாமல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 




4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பைத் தொடர் இம்முறை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ உடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதற்காக இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் ஏற்பாட்டு வேலைகளும் சீரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு மைதானத்திற்கும் தலா ரூ 50 கோடி ரூபாய் வீதம் பிசிசிஐ-ஆல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக 10 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இந்தியா நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துடனும், நெதர்லாந்துடனும் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றது.


இந்திய அணி தற்போது இலங்கையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பைத் தொடரினை வென்று அசத்தியுள்ளது. குறிப்பாக இந்த வெற்றி முகமது சிராஜின் சிறப்பான பந்து வீச்சில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவர் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பெற்ற இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாப் பார்க்கப்படுகிறது. 




ரோஹித் சர்மா மீது நம்பிக்கை


இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த கம்பீர் இந்திய அணிக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் சில அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளார். அதில் அவர், “இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான அனைத்து திறமைகளையும் கொண்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மீது எனக்கு எந்தவிதமான சந்தேகமும் ஒருபோதும் இருந்ததில்லை. அவர் ஐந்து முறை உலகக்கோப்பையை வென்றுள்ளார். சிலர் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வென்றதில்லை. அடுத்து வரும் 15 நாட்களுக்குப் பின்னர் இந்திய அணிக்கும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் பெரும் சவால் காத்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக பந்து வீச வேண்டும். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றால், அது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். 




ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்து உலகக்கோப்பையை வெல்வதை இலக்காகக்கொண்டு செயல்படவேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி தனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது. கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பது இந்திய அணிக்கு பலமாக உள்ளது. 


குல்தீப் யாதவ் தலைமையிலான சுழற்பந்து வீச்சும், ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான வேகப்பந்து வீச்சும் அற்புதமாக செயல்பட்டது.  இந்தியாவும் இந்தத் தொடரில் சில முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டது, குறிப்பாக இலங்கையின் கடுமையான சுழல் தாக்குதல் மற்றும் வங்கதேசத்தின் ஸ்விங்குக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது” இவ்வாறு இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.