உலக கோப்பை தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டையில் கலக்கி வருகின்றனர். இந்தநிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்துவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராசா விசித்திரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது அது பல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் கிளப்பி வருகிறது.
உலகக் கோப்பையில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் பலன்களை பெற ஐசிசி மற்றும் பிசிசிஐ ஸ்பெஷல் பந்துகளை வழங்குகிறது. அதனால்தான் இந்திய பந்துவீச்சாளர்கள் எளிதாக விக்கெட்டுகளை எடுக்கின்றனர் என்றார். ராசா 1996 மற்றும் 2005 க்கு இடையில் பாகிஸ்தானுக்காக ஏழு டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அப்படி என்ன பேசினார் அவர்..?
உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சாதகமாக ஏதும் மோசடி நடந்ததா என்ற தொலைக்காட்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஹசன் ராசா இந்த விசித்திரமான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது மட்டும் எப்படி இவ்வளவு ஸ்விங் மற்றும் சீம் பெறுகிறார்கள் என்ற ஹோஸ்டின் கேள்விக்கு ஹசன் ராசா, இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்தை சரிபார்த்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் பேட்ஸ்மேன்களை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் இந்திய அணி பந்துவீச்சைத் தொடங்கும் போதெல்லாம், ஷமி மற்றும் சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்கள் நாங்கள் தென்னாப்பிரிக்காவில் ஆலன் டொனால்ட் மற்றும் மக்காயா என்டினியை விளையாடுவதைப் போலவே செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் பந்தில் ஒரு பளபளப்பு இருந்தால், அது சீம் மற்றும் ஸ்விங் செய்யும். ஆனால் இங்கே இரண்டாவது இன்னிங்ஸில் பந்து கூட மாறுகிறது என்று நினைக்கிறேன். இந்தியா பந்து வீசும் போது, யார் பந்து வீசுகிறார்கள் என்பதை ஐசிசி அல்லது பிசிசிஐ விசாரிக்க வேண்டும். அது எப்படியிருந்தாலும், இந்தியா பந்து வீச வரும்போது பந்தை மாற்றுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு ஐசிசி அல்லது பிசிசிஐயும் உறுதுணையாக இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. மூன்றாவது நடுவர் இந்தியாவுக்கு ஆதரவாக போட்டிகளில் முடிவுகளை எடுப்பதாகவும் ஹசன் ராசா கூறினார்.
உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 7 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 7 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தக்க பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா..?
இந்தநிலையில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, ஹசன் ராசாவின் இந்த கருத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது தீவிரமாக கிரிக்கெட் பற்றி பேசும் நிகழ்ச்சியா? இல்லையென்றால், ‘நையாண்டி’ ‘காமெடி’ ஷோவா..? அதாவது…இது ஏற்கனவே உருதுவில் எழுதப்பட்டிருக்கிறது. இதனால் துரதிர்ஷ்டவசமாக என்னால் அதை படிக்க/புரிய முடியவில்லை.” என தெரிவித்துள்ளார்.