ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 24 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இன்று (அக்டோபர் 26) 25 வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி விளையாடி வருகிறது.


கட்டாய வெற்றி தேவை:


இந்த தொடரில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் மற்ற அணிகளுடன் மோதியுள்ளது.  இதில் 1 போட்டியில் மட்டுமே இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி   தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன்படி , அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பார்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலன் ஆகியோர் களமிறங்கினார்கள்.  இருவரும் அந்த அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். 


சிறப்பான தொடக்கம்:


31 பந்துகள் களத்தில் நின்ற ஜானி பார்ஸ்டோவ் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 30 ரன்கள் எடுத்து  விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல், 25 பந்துகள் களத்தில் நின்ற டேவிட் மலன் 28 ரன்களுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுபுறம் களத்தில் நின்ற பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடினார். 


தடுமாறிய இங்கிலாந்து:


அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அணி வீரர்கள்  சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் தனக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க யாரும் இல்லாமல் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பென் ஸ்டோக்சும் ஆட்டமிழந்தார். அதன்படி, 73 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 43 ரன்கள் எடுத்தார்.  அப்போது இங்கிலாந்து அணி 137 ரன்கள் எடுத்திருந்தது.  பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.  இவ்வாறாக 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.


இலங்கை அணி வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக இந்த போட்டியில் லஹிரு குமாரா 7 ஓவர்கள் வீசி 33 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக பந்து வீசினார். அதன்படி , 5 ஓவர்கள் வீசிய அவர் 1 ஓவரை மெய்டன் செய்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


மேலும் படிக்க: ODI WC 2023 ENG vs SL: இலங்கையை துவம்சம் செய்யுமா இங்கிலாந்து?.. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!