உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 இந்தியாவில் இன்று அதாவது அக்டோபர் 5ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023-இன் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை பேரிஸ்டோவ் மற்றும் மாலன் தொடங்கினர்.
நியூசிலாந்து அணியின் பவுலிங் இன்னிங்ஸை போல்ட் தொடங்கினார். போட்டியின் முதல் ரன்னையே சிக்ஸராக அடித்து இந்த தொடரை பிரமாண்டமாக தொடங்கி வைத்தார் பேரிஸ்டோவ். இவர் போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு அமர்க்களப்படுத்தினார். முதல் ஓவரில் இங்கிலாந்து 12 ரன்கள் சேர்க்க, இரண்டாவது ஓவரில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி போல்ட்டை குறிவைத்து அவரது ஓவரில் பவுண்டரிகள் விளாசி வந்தது.
சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடியை ஹென்றி வீழ்த்தினார். அப்போது இங்கிலாந்து அணி 7.4 ஓவரில் 40 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் நியூசிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு நெருக்கடி கொடுக்க இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, குறிப்பாக 17வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 17.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 100 ரன்களைக் கடந்தது. அதன் பின்னர் 118 ரன்களில் இருந்த போது 4வது விக்கெட்டினை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
அதன் பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ரூட்டுன் கேப்டன் பட்லர் இணைந்தார். இருவரில் பட்லர் அதிரடி காட்ட, ரன் மளமளவென உயர்ந்தது. ரூட் நிதானமாக ஆடி 57 பந்தில் தனது அரைசதத்தினைக் கடந்தார். இது இந்த தொடரின் முதலாவது அரைசதமாக பதிவானது. பவுண்டரிகளையும் சிக்ஸர்கள் விளாசி வந்த பட்லர் 43 பந்தில் 42 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். பட்லர் தனது விக்கெடினை இழக்கும்போது இங்கிலாந்து அணி 33.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் சேர்த்து வழுவான நிலையில் இருந்தது.
அதன் பின்னர் வந்த லிவிங்ஸ்டன் தனது அதிரடியாக 20 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்தார். சிறப்பாக ஆடி வந்த ஜோ ரூட் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 86 பந்தில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இறுதி நேரத்தில் சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் 300 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி ஓவர்கள் 50 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது.
நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் பிளிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.