உலகக் கோப்பை 2023ல் இன்று அக்டோபர் 20ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 107 முறை நேருக்குநேர் மோதுகின்றன. இதில், அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணி 68 போட்டிகளிலும், பாகிஸ்தான் 34 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையே 10 உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணியே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. 


இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளின் அடிப்படையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தநிலையில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 10 புள்ளிவிவரங்களை இங்கே காணலாம். 


1. அதிக ஸ்கோர்: அதிக ஸ்கோர் குவித்த இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா அணியே முன்னிலையில் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம், அடிலெய்டில் நடந்த ஒருநாள் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் எடுத்தது. இதுவே இரு அணிகளுக்கிடையே அதிகபட்ச ஸ்கோராகும்.


2. குறைந்த ஸ்கோர்: 30 ஆகஸ்ட் 2002 அன்று நைரோபி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெறும் 108 ரன்களுக்குள் சுருண்டது. 


3. மிகப்பெரிய வெற்றி: இந்த பதிவும் ஆஸ்திரேலியாவின் பெயரில் உள்ளது. ஆகஸ்ட் 30, 2002 அன்று நைரோபியில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 224 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.


4. மிகச் சிறிய வெற்றி: 12 அக்டோபர் 2014 அன்று அபுதாபி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானிடம் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றி கடைசி பந்தில் வந்தது.


5. அதிக ரன்கள்: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாகிஸ்தானுக்கு எதிராக 1107 ரன்கள் எடுத்துள்ளார்.


6. சிறந்த இன்னிங்ஸ்: ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 26 ஜனவரி 2017 அன்று அடிலெய்டு ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 128 பந்துகளில் 179 ரன்கள் எடுத்தார்.


7. அதிக சதங்கள்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில், பேட்ஸ்மேன்களான பாபர் அசாம் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தலா மூன்று சதங்கள் அடித்துள்ளனர்.


8. அதிக விக்கெட்டுகள்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


9. சிறந்த பந்துவீச்சு இன்னிங்ஸ்: முன்னாள் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி 22 ஏப்ரல் 2009 அன்று துபாய் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 38 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


10. அதிக போட்டிகள்: வாசிம் அக்ரம் தனது பெயரில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் விளையாடியுள்ளார். அவர் அதிகபட்சமாக 49 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


இன்று யார் வெற்றி பெறுவார்கள்?


இன்றைய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இங்கு பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்கிறார்கள். இங்குள்ள ஆடுகளம் தட்டையானது மற்றும் எல்லைகள் சிறியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இல்லை என்றாலும், வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களால் ஓரளவு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஆடுகளத்தைப் பார்த்தால் அது ஆஸ்திரேலியாவுக்குத்தான் வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் தற்போது உள்ல பெரும்பாலான வீரர்கள் இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். எனவே, இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெறும் என தெரிகிறது.